புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை வந்திருந்த ஜப்பான் மருத்துவக் குழு தமது பணிகளை நிறைவு செய்து இன்று தாயகம் திரும்பியுள்ளது. கடந்த 3ம் திகதி குறித்த குழுவினர் இலங்கைக்கு வந்தனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக வைத்தியசாலையை அமைத்து அங்குள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக ஜப்பான் குழு வழங்கி வந்தது. மருத்துவ ஆலோசனைகள், ஆய்வுகூட சேவை மற்றும் மருந்தக சேவைகளையும் ஜப்பான் குழுவினர் முன்னெடுத்தனர்.
இந்நிலையில் நாட்டிலிருந்து வெளியேறும் குறித்த ஜப்பான் மருத்துவ ஊழியர்களை சுகாதார செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று காலை சந்தித்தார். இதன்போது அவர்களின் சேவைக்கு இலங்கை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக இலங்கை வந்த ஜப்பான் குழுவினரின் சேவை பல வழிகளில் இலங்கைக்கு பெரும் உதவியாக அமைந்தது என வைத்தியர் அனில் ஜாசிங்க இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்திற்கும், மருத்துவ அதிகாரிகளுக்கும், தமது ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஜப்பான் அனர்த்த நிவாரண மருத்துவக் குழுவின் தலைவர் இவாஷி கிச்சிரோ தமது நன்றிகளை தெரிவித்தார்.
சிலாபம் பகுதியில் தமது பணிகள் நிறைவடைந்ததன் தாம் பயன்பாட்டிற்கு உட்படுத்திய அனைத்து இடங்களையும் முழுமையாக சுத்தம் செய்ததன் பின்னரேரேய அவர்கள் அங்கிருந்து நாடு திரும்ப நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
