ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர் ஷோபினி குணசேகரவை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் இன்று (10) அதிகாலை செய்தி வெளியிட்டது.
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் ஏற்கனவே இலங்கைக்கு புறப்பட்டு விட்டது என்று ஷோபினி குணசேகர RIA செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தினார்.
மேலும், அது இன்று இலங்கையைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர், இலங்கையின் மிக மோசமான இயற்கை பேரழிவாகக் கருதப்படும் இந்தப் புயல், இதுவரை 639 உயிர்களைப் பலி கொண்டுள்ளது.
நாட்டின் 10% மக்களைப் பாதித்தது. இது நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அரிசி, தேயிலை போன்ற முக்கிய பயிர்களை சேதப்படுத்தியது.
மேலும், மீட்பு செலவுகள் 7 பில்லியன் டொலர்களை எட்டக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் கவலை அச்சம் வெளியிட்டுள்ளனர்.
