‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை (SLISR) மாணவர்கள் மற்றும் பணிக்குழுவினர், 30,000 ரியால் (அமெரிக்க டொலர் 8,000) நிதியுதவியையும், மேலும் 10,000 ரியால் பெறுமதியான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் கையளித்தனர்.
இந்த மனிதாபிமான முயற்சியில் பாடசாலை மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டதன் மூலம், இயற்கைப் பேரழிவின் பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தமக்கிருக்கும் அனுதாபத்தையும் ஒத்துணர்வையும் வெளிப்படுத்தினர்.
பல மாணவர்கள் தங்களது தனிப்பட்ட சேமிப்பிலிருந்த நிதிகளை வழங்கி வைத்ததுடன், ஏனைய பலர் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
கடந்த 17.12.2025 அன்று பாடசாலை அதிபர் மற்றும் பணிக்குழுவினருடன் பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த பாலர் வகுப்பு முதல் உயர்தர வகுப்பு (Advanced Level) வரையிலான மாணவர்களும் இணைந்து, ரியாதிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்திற்கு வருகை தந்து, சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களிடம் இந்த நன்கொடைகளை கையளித்தனர்.
