‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபா வழங்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (9) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய, அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரீதிகம தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இடர் நிவாரண சேவை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கும் வரைவிலக்கணங்களின் அடிப்படையிலேயே, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதா என்பது தீர்மானிக்கப்படும்.
