இக்கலந்துரையாடல் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் (SLJI) அழைப்பின் பேரில் அதன் தலைமையகத்தில் கடந்த 2025 டிசம்பர் 30 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சர்வோதய சிரமதான இயக்கம், பெப்ரல் (PAFFREL), சமூக நீதிக்கான தேசிய இயக்கம் (NMSJ), கபே (CaFFE), தேசிய சமாதான பேரவை (NPC), ரம்யா லங்கா, ஹெல்தி லங்கா, செரெண்டிப் பவுண்டேஷன் (SFRD) மற்றும் தர்மசக்தி உள்ளிட்ட 10 தேசிய மட்டத்திலான அமைப்புகள் இதில் பங்கேற்றன.
இன, மத எல்லைகளைக் கடந்து வெளிப்பட்ட தன்னார்வத் தொண்டு இந்த அனர்த்த காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
சட்டத்தரணி பாரிஸ் சாலி இந்த அமர்வை நெறிப்படுத்தினார்.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தனது தொடக்க உரையில், அரச முன்னெடுப்புகளுக்கு முன்னதாகவே சிவில் அமைப்புகளும் பொதுமக்களும் உணவு, நீர் மற்றும் மருந்துகளைக் கொண்டு சென்ற விதம் ‘வியப்பிற்குரியது’ எனப் பாராட்டினார்.
“சுனாமி காலத்தைப் போலவே இலங்கை மக்கள் இன, மத வேறுபாடின்றி களத்தில் இறங்கினர். இது முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒரு சமூகப் பங்களிப்பு,” என அவர் குறிப்பிட்டார்.
பதுளை போன்ற பகுதிகளில் மீள்குடியேற்றப்படும் 20,000 குடும்பங்களின் சமூக-கலாசார மற்றும் உளவியல் தாக்கங்களை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வோதய சிரமதான இயக்கத்தின் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன உரையாற்றுகையில், அவசரகால நிவாரணத்தின் போது காணப்படும் ஒற்றுமை, மீள்குடியேற்றம் மற்றும் காணி ஒதுக்கீடு போன்ற நீண்டகால சவால்களின் போதும் தொடர வேண்டும் என்றார்.
“தன்னார்வலர்களின் பாதுகாப்பையும் வினைத்திறனையும் உறுதிப்படுத்த முறையான பயிற்சி அவசியம். அதற்கான பயிற்சிகளை வழங்க சர்வோதய தயார்,” என அவர் உறுதியளித்தார்.
சிரேஷ்ட கட்டடக்கலைஞர் ரிஸா யெஹியா கருத்து தெரிவிக்கையில், காலநிலை மாற்றங்களின் தாக்கத்தைக் குறைக்க நகரத் திட்டமிடலில் மாற்றம் தேவை எனவும், வௌ்ள அபாயம் உள்ள பகுதிகளில் தூண்கள் மீது வீடுகளை அமைக்கும் முறையை (Houses on pillars) ஊக்குவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களின் மனநல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என Good Shepherd Sisters ஐச் சேர்ந்த அருட்சகோதரி கிரிஷாந்தி பெசில் கேட்டுக்கொண்டார்.
தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, சிவில் சமூகத்தினால் திரட்டப்பட்ட பாரிய அளவிலான தன்னார்வலர்களின் பங்களிப்பை அரசாங்கம் முறையாக ஆய்வு செய்து அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் கருத்து தெரிவித்த பட்டயக் கணக்காளர் ரிபாஸ் ஜப்பார், தமது அமைப்பின் அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையம் (DRCC) மூலம் மேற்கொள்ளப்பட்ட முறைப்படியான பணிகளை விவரித்தார்.
இதன் மூலம் 5,372 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 1,150 இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பொது இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டதுடன், மின்சாரக் கட்டமைப்புகளும் சீர்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை மக்களின் தன்னார்வ உணர்வை தொழில்முறை சார்ந்த அரச மட்ட திட்டமிடலுடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இச்சந்திப்பு, நாட்டிற்கு ஒரு ‘ஒருங்கிணைந்த தேசிய அனர்த்தக் கொள்கை’ அவசியம் என்ற இணக்கப்பாட்டுடன் நிறைவுற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எச்.எம். ஹஸன் நன்றியுரை ஆற்றினார்.

