லண்டனில் குரோலி (Crawley) பகுதியில் அமைந்துள்ள அல் ஹுதா பள்ளிவாசலுக்கு ‘முஸ்லிம் எய்ட்’ (Muslim Aid) அமைப்பின் பிரதிநிதிகள் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை கௌரவமான முறையில் மீண்டும் கட்டியெழுப்பவும் முஸ்லிம் எய்ட் அமைப்பின் முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் எய்ட் அமைப்பின் சமூக நிதி சேகரிப்பு மேலாளர், இலங்கைக்கான முஸ்லிம் எய்ட் பணிப்பாளர் மற்றும் முக்கிய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு, இந்தத் திட்டங்கள் களப்பணியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை எடுத்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இலங்கை மக்களின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக அல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அங்கிருக்கும் பொதுமக்கள் இணைந்து 20,000 பவுண்டுகள் (£20,000) பெறுமதியான காசோலையை வழங்கினர்.
மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான பங்களிப்பிற்காக பள்ளிவாசல் கமிட்டிக்கும் மக்களுக்கும் முஸ்லிம் எய்ட் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

