2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீட்டு) ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்ய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு வெளியில் வெளிநாடொன்றில் வழங்கப்பட்டுள்ள சாரதி உரிமமொன்றின் அடிப்படையில் எமது நாட்டில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரமொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹர அலுவலகத்தால் வழங்கப்பட்டு வந்தது.
2025.08.03 தொடக்கம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கருமபீடத்தில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கருமபீடம் திறக்கப்பட்டு தேவையான வசதிகளை வழங்கும் போது அறவிடப்படும் 2,000/- ரூபாய் கட்டணம் போதுமானதாக இன்மையால், வழங்கப்படும் சேவைக்கு ஏற்புடைய வகையில் கட்டணங்களைக் காலத்தோடு தழுவியதாக இற்றைப்படுத்தி, அதுதொடர்பான ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருத்தச் செய்யப்பட்ட கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் 2463/04 ஆம் இலக்க 2025.11.17 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
