முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 17 சனிக்கிழமை இரவு தேசிய மிஹ்ராஜ் தினம் மள்வானை, ரக்ஷபனா ஜூம்ஆ பள்ளிவாசலில் முஸ்லிம சமய கலாசாரத் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத விவகார கலாசார பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் முளப்பர் கலந்து கொண்டார்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இந் நிகழ்வினை இரவு 08 மணி முதல் 8.55 வரை நேரடியாக ஒலிபரப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மிஹ்ராஜ் இரவு என்பது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.
இது இஸ்லாமிய நம்பிக்கையின் படி கி.பி. 621 இல் ஒரே இரவில் நிகழ்ந்த இரவுப் பயணமாகும். இது உடல் மற்றும் ஆன்மீக பயணம் என்பதே முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.
முகம்மது நபி அரேபிய பாலைவனத்தின் மக்கா நகரிலிருந்து ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா பள்ளிவாசலுக்கு இரவோடு இரவாக வானவர் ஜிப்ரயீல் மூலம் புராக் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி இஸ்ரா (இரவில் கூட்டிச் செல்லுதல் ) என்றும் பின்னர் பைத்துல் முகத்தஸ் என்று அழைக்கப்படும் அல் அக்சா பள்ளிவாசலில் இருந்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி மிஃராஜ் என்றும் அழைக்கப்படுகின்றது.
விண்ணுலகம் சென்ற முகம்மது நபி இறைவனைச் சந்தித்து திரை மறைவில் பேசினார் என்பது இஸாலாமிய நம்பிக்கையாகும்.

