2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை, 2025 டிசம்பர் 09 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 22 அன்றும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26 அன்றும் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை முடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1க்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கும் என்றும், தரம் 6 க்கான கல்வி நடவடிக்கைள் ஜனவரி 21 அன்று தொடங்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிவிப்பு இருந்தபோதிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பிற பாடசாலைகளில் 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நிர்வாக நடைமுறைகள் இன்று முதல் வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படலாம்.
எவ்வாறெனினும், டித்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம் அளிக்க தற்போது பயன்படுத்தப்படும் பல பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்று முதல் ஜனவரி 09 வரை நடைபெறும்.
