இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

Date:

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் சவூதி அரேபிய தூதுவர் PM அம்சா அவர்கள் எழுதிய கட்டுரை விடிவெள்ளியிலிருந்து மீள் பிரசுரம் செய்கிறோம். 

இக்கட்டுரை எழுதப்படும் தருணம் வரை கிடைத்துள்ள ஊடகத் தகவல்களின்படி, ஜித்தாவுக்கான கொன்சியூலர் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக எழுந்துள்ள கவலைகளை வெறும் இனவாதக் கண்ணோட்டமாகவோ அல்லது பொதுச் சேவையில் சமத்துவத்தைப் பேணுவதற்கு எதிரான எதிர்ப்பாகவோ புறந்தள்ளிவிட முடியாது.

மாறாக, இந்தப் பிரதிபலிப்புகள் ‘செயற்பாட்டு பொருத்தப்பாடு’ (Functional Suitability) எனும் மிக அடிப்படையான மற்றும் நிறுவன ரீதியான காரணிகளிலிருந்தே எழுகின்றன.

இராஜதந்திர ரீதியில் ஜித்தா என்பது ஒரு சாதாரண பணியிடம் அல்ல. நடைமுறை ரீதியாகப் பார்த்தால், இது இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகப் பணிகளில் மிக முக்கியமான சமயம் சார் சேவைகளை வழங்கும் ஒரு தளமாகும். இலங்கைப் பிரஜைகளின் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் போன்ற பொறுப்புகளுடன் ஜித்தா கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தின் பணிகள் பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளன.

எனவே, புனிதத் தலங்களுக்குள் நுழைவதற்கான அனுமதி, நடமாட்டம் மற்றும் அங்குள்ள நடைமுறைகளைக் கையாளுதல் போன்ற சமய மற்றும் ஏற்பாடுகள் ரீதியான யதார்த்தங்களிலிருந்து, அந்தத் தூதரகப் பணியின் வினைத்திறனைப் பிரித்துப் பார்க்க முடியாது.

இந்தத் தனித்துவமான பண்பானது, ஏனைய வெளிநாட்டுத் தூதரகப் பணிகளிலிருந்து ஜித்தா கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தை ஒரு முற்றிலும் மாறுபட்ட வகைக்குள் நிறுத்துகிறது. இதனை ஒரு சாதாரண இடமாற்றமாகவோ அல்லது வழமையான நியமனமாகவோ கருதுவது, அதனூடாக வழங்கப்படும் சேவைகளை பலவீனப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, மத சுதந்திரத்தை வெறும் கொள்கை அளவில் மாத்திரமன்றி, நடைமுறையில் உறுதிப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு ரீதியான கடப்பாட்டையும் இது நீர்த்துப்போகச் செய்துவிடும்.

யாத்திரிகர்களுக்கான சேவையே தூதரகத்தின் அடையாளம்

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்கின்றனர். ஜித்தாத்திலுள்ள இலங்கையின் கொன்சியூலர் ஜெனரல் அலுவலகமானது, இந்த யாத்திரைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு, மத்தியஸ்தம் மற்றும் நெருக்கடிகளை முகாமை செய்தல் ஆகியவற்றை முன்னெடுக்கும் பிரதானமான ஒரு செயற்பாட்டுத் தளமாக விளங்குகின்றது.
இங்குள்ள பல பொறுப்புகள் குறிப்பிட்ட இடங்கள் சார்ந்தவையாகும். யாத்திரை தொடர்பான சவால்கள் மற்றும் சிக்கல்கள் பெரும்பாலும் மக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களிலேயே ஏற்படுகின்றன.

அத்தகைய தருணங்களில் அங்கு நேரடியாகச் செல்வதற்கும், நிலைமைகளைக் கையாளுவதற்கும் உரிய அதிகாரம் அவசியமாகும். எனவே, இந்தத் தூதரகத்தின் தலைவர் என்பவர் வெறும் நிர்வாக அதிகாரி மட்டுமல்ல; அவசர காலங்களிலும் அதிக ஆபத்துள்ள சூழல்களிலும் நேரில் சென்று தலையிட வேண்டிய முதன்மை அதிகாரியும் ஆவார்.

சட்ட ரீதியான யதார்த்தம்: உள்நுழைவதற்கான அனுமதி ஒரு தெரிவல்ல

முஸ்லிம் அல்லாதவர்கள் மக்காவிற்குள் நுழைவதை சவூதி அரேபியா கடுமையாகத் தடைசெய்துள்ளது. இந்தத் தடையானது இஸ்லாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், சவூதி சட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகள், விசேட அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் மூலம் இச்சட்டம் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது ஒரு அடையாள ரீதியான கட்டுப்பாடோ அல்லது விரும்பினால் தளர்த்திக் கொள்ளக்கூடிய ஒன்றோ அல்ல; மாறாக சவூதி அரேபியாவில் இயங்கும் அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களாலும் இது ஒருமித்து மதிக்கப்படும் சட்டமாகும்.

இதன் விளைவு தவிர்க்க முடியாதது. சட்ட ரீதியாக மக்காவிற்குள் நுழைய முடியாத ஒரு கொன்சியூலர் ஜெனரல், அந்தப் பதவியின் மிக முக்கியமான பணிகளை முன்னெடுப்பதில் இயல்பாகவே கட்டமைப்பு ரீதியான தடைகளை எதிர்கொள்வார். முஸ்லிம் அதிகாரிகள் அல்லது அங்குள்ள உள்ளூர் பணியாளர்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பதன் மூலம் நிர்வாக இடைவெளிகளை ஓரளவுக்கு ஈடுகட்ட முடிந்தாலும், நேரடி அணுகுமுறை இல்லாத அதிகாரம் என்பது பொறுப்புக்கூறல், விரைவான செயற்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை நிச்சயம் பலவீனப்படுத்தும். நெரிசல்கள், வெப்பம் காரணமாக ஏற்படும் மரணங்கள், யாத்திரிகர்கள் காணாமல் போதல் அல்லது சடுதியான சட்ட மாற்றங்கள் போன்ற நெருக்கடியான தருணங்களில், உயர்மட்ட அதிகாரியின் நேரடிப் பங்களிப்பிற்கு தொலைதூரத்திலிருந்து மேற்கொள்ளப்படும் மேற்பார்வை ஒருபோதும் ஈடாகாது.

செயற்பாட்டுத் தகுதியும் ஒப்பீட்டு நடைமுறைகளும்

இந்த நியமனம் குறித்து எழுப்பப்படும் கவலைகள் இலங்கைக்கு மட்டும் உரிய தனித்துவமான ஒன்றல்ல; சர்வதேச நடைமுறைகளிலும் இது விதிவிலக்கானது அல்ல. சில குறிப்பிட்ட பணியிடங்களுக்கு, வெறுமனே மேலோட்டமான ‘சமத்துவ’க் கோட்பாடுகளுக்கு அப்பால், அந்தந்த இடங்களின் சட்ட ரீதியான அனுமதி மற்றும் செயற்பாட்டு யதார்த்தங்களின் அடிப்படையிலான ‘சூழல் சார்ந்த தகுதிகள்’ (Context-specific suitability) அவசியம் என்பதை நாடுகள் பொதுவாக அங்கீகரிக்கின்றன.

சமயம் மற்றும் கலாசார உணர்திறன்கள் பெரும்பாலும் ராஜதந்திர நெறிமுறைகளை வடிவமைக்கின்றன. வத்திக்கான் நகரம் திருச்சபை மரபுகளால் ஈர்க்கப்பட்ட தனித்துவமான ராஜதந்திர நடைமுறைகளைக் கொண்டுள்ளது. கிரேக்க அரசாலும் சர்வதேச சமூகத்தாலும் மதிக்கப்படும் விதியான ‘மவுண்ட் அதோஸ்’ (Mount Athos) பகுதிக்கு ஆண்கள் மட்டுமே நுழைய முடியும் என்ற கட்டுப்பாடு இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில், ஜகந்நாதர் ஆலயத்திற்குள் நுழைவதற்கான அனுமதி பாரம்பரியமாக இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது; இந்தத் தடையானது சட்டத்தினாலும் நீண்டகால சமூக இணக்கப்பாட்டினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, சமயச் சுதந்திரம் என்பது மற்றவர்களைப் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல என்பதையும் இந்தியா நிரூபித்துள்ளது. குருவாயூர் கோயில் காலப்போக்கில் நிர்வாக ரீதியான பொறிமுறைகளை (விசுவாசப் பிரகடனம் உட்பட) உருவாக்கி, பிற மதப் பின்னணியைக் கொண்டவர்களையும் அனுமதிக்கிறது.

இது பாரம்பரியத்திற்கும் உள்ளடக்கல் தன்மைக்கும் இடையிலான சமநிலையைப் பேணும் ஒரு முயற்சியாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு புனிதத் தலமும் அதற்கான அனுமதி விதிகளையும் வரையறைகளையும் கொண்டுள்ளன.

அந்த யதார்த்தங்களை அங்கீகரித்தே நாடுகள் தமது நிர்வாக ஏற்பாடுகளை வடிவமைக்கின்றன.

சமத்துவம் என்பது இடமாற்றத்தக்க தன்மை அல்ல

செயற்பாட்டுத் தகுதியை அடிப்படையாகக் கொண்ட இந்த அணுகுமுறையை விமர்சிப்பவர்கள், இத்தகைய நியமனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதானது மதப் பாகுபாட்டை ஆதரிப்பதாகவோ அல்லது அரச சேவையிலுள்ள சமத்துவத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவோ அமையலாம் என்று வாதிடலாம். இந்தக் கவலை புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், இது ‘சமமான தகுதியை’ (Equal eligibility), ‘ஒரே மாதிரியான பணி அமர்த்தலுடன்’ (Identical deployment) போட்டுக் குழப்பிக் கொள்வதாகவே அமையும்.

பொது நிர்வாகத்தில் சமத்துவம் என்பது, அனைத்து அதிகாரிகளும் அவர்களின் செயற்பாட்டுச் சூழலைப் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் மாற்றீடாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதில்லை. சர்வதேச மனித உரிமைகள் சட்டவியல் (International human-rights jurisprudence), மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் தன்னிச்சையானதாக அன்றி சீராகப் பயன்படுத்தப்படும் போது, அவை பாகுபாடாகக் கருதப்படமாட்டாது என்பதை அங்கீகரிக்கிறது.

சட்ட ரீதியான அனுமதி மற்றும் செயற்பாட்டு ரீதியான அணுகுமுறை ஆகியவற்றை அலட்சியப்படுத்தி மேற்கொள்ளப்படும் நியமனங்கள், பெயரளவில் சமத்துவக் கொள்கையைத் திருப்திப்படுத்தலாம்; ஆனால், அவை நிறுவனத்தின் வினைத்திறனைச் சீர்குலைப்பதாகவே அமையும்.

தூதுவரின் மேற்பார்வை, கொன்சியூலர் பணிகளுக்கு மாற்றீடாகாது
றியாத்திலுள்ள (Riyadh) தூதுவர் ஒரு முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில், ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் ஜெனரலின் மத அடையாளம் ஒரு பொருட்டல்ல என்ற வாதமும் முன்வைக்கப்படலாம்.

இத்தகைய வாதமானது ராஜதந்திரக் கட்டமைப்பு மற்றும் அதன் செயற்பாட்டு அதிகார வரம்புகள் (Operational jurisdiction) குறித்த தவறான புரிதலையே பிரதிபலிக்கிறது. ஒரு தூதுவர் என்பவர் குறிப்பிட்ட அந்த நாட்டுடனான இருதரப்பு உறவுகளுக்கான மூலோபாயப் பொறுப்பை வகிப்பவர்.

ஆனால், அவரால் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் கொன்சியூலர் ஜெனரலின் உடனடித் தன்மைக்கும், அதிகார வரம்புக்கும், செயற்பாட்டுத் தகுதிக்கும் மாற்றீடாக அமைய முடியாது.

ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான நெருக்கடிகள் பெரும்பாலும் புனித நகரங்களிலும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும், சில மணிநேரங்களுக்குள்ளாகவோ அல்லது வழக்கமான ராஜதந்திர வழிமுறைகளுக்கு அப்பாற்பட்ட முறையிலோ உடனடியான தலையீடுகளைக் கோருகின்றன. பல நூறு கிலோமீற்றர் தூரத்தில் றியாத்தில் இருந்துகொண்டு, நாடு தழுவிய ரீதியிலான பெரும் பொறுப்புகளைக் கையாளுமொரு தூதுவரால், நேரக் கட்டுப்பாடு மிக்க இத்தகைய கொன்சியூலர் பணிகளை யதார்த்த பூர்வமாக நிறைவேற்ற முடியாது.

எனவே, ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் என்பவர் ஒரு இரண்டாம் நிலை அதிகாரி அல்ல; மாறாக அவரே ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான முதன்மைச் செயற்பாட்டு அதிகாரியாவார்.

இதற்கு மாறாகச் சிந்திப்பது என்பது, ஒரு தூதரகத்தின் மூலோபாய மேற்பார்வையையும் (Strategic oversight) அதன் களச் செயற்பாட்டையும் (Tactical execution) போட்டுக் குழப்பிக் கொள்வதுடன், கொன்சியூலர் முறைமை எத்தகைய அதிகார வரம்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அலட்சியப்படுத்துவதாக அமையும்.

இலங்கை அரசின் அரசியலமைப்பு ரீதியான கடப்பாடுகள்

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பானது, இத்தகைய விவகாரங்களில் ஒரு நடைமுறைச் சாத்தியமான மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய அணுகுமுறையின் அவசியத்தையே வலியுறுத்துகின்றது. அரசியலமைப்பின் 10-வது உறுப்புரை (Article 10) சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, 14(1)(e) உறுப்புரையானது, ஒவ்வொரு பிரஜையும் தனது மதத்தை வழிபாடுகள், அனுஷ்டானங்கள், நடைமுறைகள் மற்றும் போதனைகள் மூலம் வெளிப்படுத்துவதற்கான உரிமையை வெளிப்படையாகவே பாதுகாக்கிறது.

இந்த ஏற்பாடுகள், மத விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதுடன் மாத்திரமன்றி, பிரஜைகள் தமது மத உரிமைகளை அர்த்தமுள்ள வகையில் அனுபவிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு ஆக்கபூர்வமான கடப்பாட்டையும் (Positive obligation) அரசுக்கு வழங்குகின்றன.

ஹஜ் கடமையானது ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பிற்குள் மேற்கொள்ளப்படும் முற்றிலும் தனிப்பட்ட விவகாரம் அல்ல. அதன் செயற்பாடுகள் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்குதல் மற்றும் ராஜதந்திரத் தலையீடுகள் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளன. ஹஜ் கடமையின் பிரதானமான களச் செயற்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைவதற்குச் சட்ட ரீதியாகத் தடை விதிக்கப்பட்டுள்ள ஒருவரை அந்தத் தூதரகத்தின் தலைவராக அரசாங்கம் நியமிக்கும் போது, அது அரசியலமைப்பு வழங்கியுள்ள உத்தரவாதங்களை நடைமுறை ரீதியானதாக அன்றி வெறும் பெயரளவிலானதாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

கள யதார்த்தங்களிலிருந்து பெற்ற அனுபவம்

இந்த ஆய்வானது வெறும் சர்வதேச நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கோட்பாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக நேரடி இராஜதந்திர அனுபவங்களிலிருந்தும் பெறப்பட்டதாகும். இக்கட்டுரையின் ஆசிரியர் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவர் என்பதுடன், சவூதி அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், ஹஜ் யாத்திரை ஒருங்கிணைப்பு மற்றும் நெருக்கடி காலச் செயற்பாட்டுப் பொறிமுறைகளில் மிக நெருக்கமாகப் பங்கெடுத்தவருமாவார்.
அந்த அனுபவங்கள் ஒரு நிலையான யதார்த்தத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தின: அதாவது, ஹஜ் தொடர்பான விவகாரங்களை வினைத்திறனுடன் கையாளுவது என்பது, குறிப்பாக மக்கா போன்ற இடங்களில் தடையற்ற உடனடி அனுமதி, நேரடித் தலையீடு மற்றும் உயர்மட்ட அதிகாரியின் நம்பகத்தன்மை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. எனவே, அங்கு செல்வதற்கான அனுமதி குறித்த கட்டமைப்பு ரீதியான கட்டுப்பாடுகள் என்பது ஏதோ மேலோட்டமான அசௌகரியங்கள் அல்ல; மாறாக அவை யாத்திரிகர்களின் நலன்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடைமுறை ரீதியான தடைகளாகும்.

முடிவுரை:

வெறும் கோட்பாடுகளை விட நடைமுறைச் சாத்தியமே முக்கியம்
இராஜதந்திரம் என்பது அதன் அடையாளங்களால் அல்ல, மாறாக அதன் இறுதி விளைவுகளாலேயே மதிப்பிடப்படுகிறது. ஜித்தா கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் என்பது பிரதானமாக, இலங்கை யாத்திரிகர்களின் வாழ்வின் மிகவும் புனிதமான மற்றும் சவால்கள் நிறைந்த தருணங்களில் அவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகின்றது. அந்தப் பணியை முன்னெடுப்பதற்கு, நேரடி பிரசன்னம் (Presence), அணுகல் (Access) மற்றும் அதிகாரம் (Authority) ஆகிய மூன்றும் ஒரே அதிகாரியிடம் அமையப் பெறுவது அவசியமாகும்.

இந்த யதார்த்தத்தை அங்கீகரிப்பது என்பது எவ்வகையிலும் அடையாள அரசியலாகாது (Identity politics). மாறாக இது சட்டம், சர்வதேச நடைமுறைகள், அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு மற்றும் நேரடி இராஜதந்திர அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு ‘நிர்வாக ரீதியான யதார்த்தவாதம்’ (Administrative pragmatism) ஆகும்.

இராஜதந்திர சமத்துவமானது சமய யதார்த்தங்களை எதிர்கொள்ளும் போது, சூழலின் முக்கியத்துவத்தை (Context matters) ஏற்றுக்கொள்வதற்கான துணிச்சலே நல்லாட்சிக்கு அவசியமான பண்பாகும்.

நன்றி- விடிவெள்ளி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...