அண்மையில் டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சீனப் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தின் சேதமடைந்த பாலங்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைப்பது குறித்து மாவட்டப் பொறியியலாளர்களால் விரிவான விளக்கங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, புத்தளம் மாநகர சபையின் தொழில்நுட்பப் பிரிவினரும் இந்த நிகழ்வில் பங்கேற்று, நகரின் உண்மையான தேவைகள் மற்றும் வெள்ள அனர்த்தத்திலிருந்து நகரத்தைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக பிரதான கால்வாய்கள் மற்றும் பாலங்களை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகள் சீன அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டன.
இந்தச் சந்திப்பில் மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன், நகர முதல்வர் சார்பாக அவரது பிரத்தியேக செயலாளரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
புத்தளம் நகரின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த முயற்சி, எதிர்கால வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

