அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ தொடர்பாக, தமிழ்நாட்டின் மனித நேய ஜனநாயக்கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எழுதிய விரிவான கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம்.
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலா, நீண்ட காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடும் தேசமாக இருந்து வந்தது.
அதன் முந்தைய அதிபர் சாவேஸ் அவர்கள், அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
அவரது புற்றுநோய் தொடர்பான மரணத்தில் கூட, இப்பொழுதும் அமெரிக்க உளவுத்துறையின் மீது சந்தேகங்கள் வெனிசுலா மக்களிடம் உள்ளது.
இந்நிலையில் தற்போது வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவர்களும், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் அவர்களும் அமெரிக்காவின் திடீர் நள்ளிரவு தாக்குதலில் சிறைப்படுத்தப்பட்டு, உடனடியாக கப்பல் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இச்சம்பவபம் குறித்து வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இவ்வளவு நுட்பமான ஒரு தாக்குதலை உலகம் பார்த்ததில்லை என பெருமையடித்துக் கொண்டார்.
ஈரானுடைய இராணுவ தளபதி சுலைமானியை கொன்றதை விட, இது ஒரு அற்புதமான நடவடிக்கை என்று கூறவும் அவர் தவறவில்லை.
தாங்கள் அடுத்தடுத்து இரண்டு கட்ட தாக்குதலுக்கு வான், கடல் மற்றும் நுண்ணறிவு தளங்களின் வழியாக திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் ஒரே அலையில் எல்லாம் முடிந்துவிட்டது என்றும் அதிகார மிடுக்குடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்குள் திருட்டுத்தனமாக படகுகளில் போதைபொருள்களை அனுப்பி, அமெரிக்கா மக்களை கொன்றதாக வெனிசுலா அதிபரின் மீது அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தற்போது கைதாகி அமெரிக்காவுக்கு கொண்டு வந்திருக்கும் அவர் மீது, அமெரிக்க நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும் கூறியுள்ளார்.
இந்த அரசியல் நிகழ்வுகளுக்கும், கடந்த கால சில உலக நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளையும் இக்கட்டுரையில் விவாதிக்க வேண்டியுள்ளது.
சதாம் உசேன் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் குற்றம் சுமத்தியதை உலகம் தற்போது நினைத்துப் பார்க்கிறது.
சதாமின் ஆட்சியை கலைத்து, ஒரு போலி அரசை உருவாக்கி, அவரை நீண்ட கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்து, ஒரு பொம்மை நீதிமன்றத்தின் மூலம் தூக்கிலிட்டார்கள்.
பிறகு தாங்கள் கூறிய பேரழிவு ஆயுதங்கள் எதுவும் ஈராக்கில் இல்லை என்று வெட்கமின்றி அறிவித்தார்கள்.
சதாமின் மீது அவர்களுக்கு கோபம் வந்ததற்கு முக்கிய காரணம், அவர் 2000 -ல் தனது சர்வதேச எண்ணைய் வியாபாரத்தை அமெரிக்க டாலரை பயன்படுத்தாமல், யூரோவில் வணிகம் செய்ய முயன்றதுதான்.
2009-ல் லிபிய அதிபர் கர்னால் கடாபி அவர்கள், எண்ணெய் வணிகத்திற்காக ‘தங்க தீனார்’ என்ற ஆப்பிரிக்க நாணயத்தை முன் மொழிந்தார்.
இது ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் வகையில் வரவேற்பு பெற்றது.
வெனிசுலாவும் அந்த நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வந்தது. சீனாவின் யுவான் நாணயத்திலும், ரஷ்யாவின் ரூபிள் நாணயத்திலும் எண்ணெய் வணிகத்தை தொடர்ந்தது.
கூடுதலாக பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா அங்கம் வகிக்கும் BRICS கூட்டமைப்பில் சேரவும் அது விண்ணப்பித்திருந்தது.
மேலும் SWIFT க்கு பதிலாக வெனிசுலா, ClPS முறை மூலம் சீனாவிடம் வணிகத்தை தொடர்ந்தது. CIPS -க்கு 185 நாடுகளில் 4,800 வங்கி கிளைகள் உள்ளது.
அவ்வப்போது சவூதி அரேபியா, – யுவான் நாணய வர்த்தகம் தொடர்பாகவும் பேசி வருகிறது.
ஏனெனில் 1974 இல் சவூதி அரேபியா உடன், அமெரிக்க செய்த பெட்ரோல் – டாலர் வணிகம் தொடர்பான ஒப்பந்தம்தான், 50 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றி இருக்கிறது.
டாலருக்கு செயற்கையாள தேவையே உருவாக்கி, சுரண்டல் பொருளாதாரத்தின் மூலம் உலக வணிகத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுக்கு, தனது டாலர் சாம்ராஜ்யம் சரிவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
எனவேதான் ‘போதை மருந்து புழக்கம் ‘ என்ற குற்றச்சாட்டை சுமத்தி தனது வணிக அரசியலை பாதுகாக்க முயன்றிருக்கிறது.
சவுதி அரேபியாவை விட இதன் வளம் அதிகம்.
முன்பு 100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நிறுவனங்கள் தான் அங்கு எண்ணெய் வயல்களை கண்டறிந்து குழாய்களை பதித்து எண்ணெய் வளத்தை எடுத்தனர்.
பிறகு இடதுசாரி ஆதரவு அரசியல் செல்வாக்கு பெற்ற பிறகு, வெனிசுலா அவற்றையெல்லாம் அரசுடைமை ஆக்கியது .
இது அமெரிக்காவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.தற்போது அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் பார்வை வெனிசுலாவை நோக்கி திரும்பி இருக்கிறது.
அங்கு ஒரு பொம்மை அரசு ஏற்படுத்தப்பட்டு; போலியான எதிர்க்கட்சிகளும் உருவாக்கப்படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
இது போக அமெரிக்காவின் இச்செயல் , உலக அமைதிக்கு பேராபத்தை உருவாக்கியிருக்கிறது.
ஒரே இரவில் வெனிசுலா நாட்டின் அதிபரையும், அவர் மனைவியையும் சிறை பிடித்து; நாடு கடத்தி இருப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாகும்.
உலகம் எங்கும் 8 போர்களை நிறுத்தினேன்; இதற்காக எனக்கு நோபல் பரிசு வேண்டும்; என சில மாதங்களுக்கு முன்பாக தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தவர் ட்ரம்ப் என்பதை உலகம் அறியும் !
இனி வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளும், பெரும் நிலப்பரப்பை கொண்ட பெரிய நாடுகளும், தங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிறிய – நாடுகளை வேட்டையாடுவதற்கும், அதை நியாயப்படுத்துவதற்கும் தவறான முன்னுதாரணத்தை அமெரிக்கா ஏற்படுத்திருக்கிறது.
அமெரிக்காவின் அராஜகத்தை ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தாலும், உள்ளுக்குள் அவர்கள் வேறு காரணங்களுக்காக மகிழ்கிறார்கள்.
இனி தங்களை அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளும் குற்றம் சுமத்த முடியாது என மறைமுக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் .
சீனா சர்ச்சைக்குரிய தைவானிடமும், இன்ன பிற ஆசிய – பசிபிக் நாடுகளிலும், இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் .
ஐக்கிய நாட்டு சபை வழக்கம் போல் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அமைதியாக இருந்து விடும்.
மொத்தத்தில் உலக அமைதி என்பது மேலும் மோசம் அடையும்.
அமெரிக்காவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால், புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தையும், இடதுசாரி சோஷலிச கொள்கைகளையும் பெருமளவில் ஆதரிக்கும் தென் அமெரிக்கா நாடுகளிடம் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது .
நீண்ட காலமாக இந்த நாடுகளில் அமெரிக்கா ஆட்சிக் கவிழ்ப்புகளை ஏற்படுத்துவதும், பொம்மை அரசுகளை அதிகாரத்தில் அமர்த்துவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் 2026 புத்தாண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா செய்திருக்கும் இந்த பன்னாட்டு அராஜகத்தை உலகின் பல நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வினோதமாகவும், வேதனையாகவும் இருக்கிறது என அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் காட்சிகள், உலக தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் பெருமளவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
சோவியத் யூனியனின் சிதைவிற்கு பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மோசமான பேரழிவுகளுக்கு ஆப்கான், லிபியா, ஈராக்கை தொடர்ந்து தற்போது வெனிசுலா பலியாகியுள்ளது.
நாங்கள் ஏன் அணுகுண்டுகளை வைத்திருக்கிறோம் தெரியுமா? என வடகொரியா கேட்கும் கேள்விகள் இப்போது புரிகிறது!
