சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர், நேற்று (17) கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குக் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
அண்மைய அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளான கிராமங்களுக்கு நேரில் சென்ற கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், அவர்களுடன் சிநேகபூர்வமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
அனர்த்தத்தின் போது மக்கள் காட்டிய அபாரமான தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் உதவிய ஒற்றுமை ஆகியவற்றை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
அனர்த்தம் நிகழ்ந்த குறுகிய காலத்திற்குள் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த மிக வேகமான நிவாரணப் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்து அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த விஜயமானது, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
