முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

Date:

-என்.எம்.எம்.மிஃப்லி
முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.

 

 

 

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்:

ஆண் பெண் பாகுபாடு, சமூக அந்தஸ்து, பிரவு, இனம் என்ற எதையுமே பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி, நியாயம் மற்றும் சமத்துவத்துடன் போற்றுவது இஸ்லாத்தின் தனித்துவமான அம்சமாகும்.

இந்த விடயத்தில் உலமாக்களுக்குக் கூட விசேட சலுகையை இஸ்லாம் வழங்குவதில்லை. அதனால்தான் இஸ்லாத்தில் ‘மதத் தலைவர் பதவி’ என்று எதுவும் கிடையாது. சுருங்கக் கூறின் எவருக்கும் அவரவருடைய எண்ணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையிலேயெ அன்றி வேறு வித சலுகைகள் இஸ்லாத்தில் கிடையவே கிடையாது.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம் விடயத்தில் திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னாள் பதில் நீதிபதி சலீம் மஸ்ரூஃப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனைகளுக்கு சார்பாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் கூறப்படுவதை இன்று சமூக வலையத்தளங்களில் பரலவலாகக் காணலாம்.

கடந்த சுமார் இரு தசாப்தங்களாக இஸ்லாமிய மார்கக சட்ட ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஒரு முஸ்லிம் என்ற வகையில் மேற்படி விற்பன்னர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றி எனது கருத்துக்களை முன்வைப்பது என்னுடைய ஒரு கடமை என்றே கருதுகின்றேன். போதுமான மார்க்க அறிவு இல்லாமல் மேற்படி குழுவின் ஆலோசகைளை விமர்சனம் செய்பவர்களுக்கு இதன் மூலம் ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதே அடியேனின் எதிர்பார்ப்பு ஆகும்.

திருமணத்திற்காக குறைந்த பட்ச வயதெல்லையையும் காஜி நீதிபதிகாக பெண்களையும் நியமிக்கலாம் என்று சலீம் மஸ்ரூஃப் குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுவதுடன் இவை ஷரிஆ சட்டத்திற்கு முறனானவை எனக் குற்றம் சாட்டப்படுகின்றன.

மேற்கத்திய சட்டங்கள் ஆகட்டும் அல்லது ஷரீஆ சட்டங்கள் ஆகட்டும் அவற்றின் வரைவிளக்கனத்தை புரிந்துகொள்வதற்கு சில அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய அறிவு இருத்தல் அவசியம். அத்தகைய அடிப்படை அறிவு இன்றி எவராவது அச்சட்டங்களை மேலோட்டமாகப் புரிந்து கொள்ளவோ அல்லது விளக்கவோ முயன்றால், அவர் தவறான முடிவிட்கு வருவதை தவிர்க்க முடியாது.

முதலில் ஒரு விடயத்தின் சூழல் சார் அர்த்தம் (contextual meaning) அதன் சொற்பிரவாக அர்த்தத்தை (literal meaning) விட மேலோங்கியது என்பதை அறிதல் வேண்டும்.

ஒரு விடயம் தொடர்பான சட்டத் தீரப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் போது, அதற்கான தீரப்பை அதே போன்ற ஒரு விடயத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் முடிவு செய்யப்படலாம் என்பது உலகலாவிய சட்டத்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு பொது நியதியாகும்.

பொதுவான விதி ஏள சொற்பிரவாக விதி (இஸ்திக்ரா)

பொதுவான விதியானது ஒரு சட்டத்தின் சொற்கள் அடிப்படையிலான பொதுவான அர்த்தத்தையே தரும். ஆனால், இது நீதித்துறையின் நோக்கமாக இருக்க வாய்ப்பில்லாத ஒரு பகுத்தறிவற்ற தீர்ப்பிட்கு வழிவகுக்கும் போது, முழு சட்டத்தின் சாரத்தையும் கருத்தில் கொண்டே பிரச்சினைக்கான தீர்ப்பை வழங்க வேண்டும்.

அதாவது, குறிப்பிட்ட ஒரு விதியானது பொது விதிகளை மேலோங்கக்கூடியவையே ஆகும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலத்திட்கு சலீம் மஸ்ரூஃப் குழு முன்மொந்துள்ள சீர்திருத்தங்கள் குறித்து அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள கருத்துக்களைப் படித்தபோது, ஒரு சட்டத்தின் விளக்கக் கொள்கைகள் பற்றிய தெளிவுடன் தான் அவை முன்வைக்கப்படனவா என்ற நியாயமான சந்தேகமே எனக்கு ஏற்பட்டது. .

மேற்கூறிப்பிட்ட இரண்டு விடயங்களில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தவறான நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள, மனித வாழ்க்கையை உள்ளடக்கிய ஐந்து அடிப்படை இஸ்லாமிய விதிகளை விளக்குவது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

வாஜிப் (கட்டாயமானது) – இதைச் செய்பவருக்கு நற்கூலி உண்டு என்பதோடு செய்யாமல் இருந்தால் தண்டனையும் உண்டு. உதா: நேர்மையாக நடப்பது.

ஹராம் (தடை செய்யப்பட்டது) – இதைச் செய்பவர் தண்டிக்கப்படுவதோடு விலகியிருப்பவர் நற்கூலி பெறுவார் உதா: மோசடி செய்தல்

சுன்னத் (கட்டாயமல்லாத நபிவழி) – இதைச் செய்பவர் நற்கூலி பெறுவார். ஆனால் செய்யாவிட்டால் தண்டிக்கப்படுவதில்லை. உதா: பிறருக்கு உதவுதல், தர்மம் செய்தல்

மக்ரூஹ் (விரும்பத்தகாதது) – செய்பவர் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், விலகியிருப்பவர் நற்கூலி பெறுவார். உதா: பாதிப்பற்ற பொய் ஒன்றை சொல்வது.

முபாஹ் (அனுமதிக்கப்படது) – இதைச் செய்பவர் வெகுமதி பெறுவதுமில்லை, தண்டிக்கப்படுவதுமில்லை. உதாரணம்: இஸ்லாமிய கோட்பாடுகளுக்குள் தான் விரும்பியவாறு உடை அனிவது, உணவு வகைகளை உட்கொள்வது உட்பட அன்றாட விவகாரங்களை மேற்கொள்வது

மனிதனின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் மேலே விவரிக்கப்பட்ட 5 விதிகளின் கீழேயே வரும்.

குறைந்தபட்ச திருமண வயதெல்லையை நிர்ணயித்தல்

ஒரு பெண் பருவமடைந்தவுடன் திருமணம் செய்து கொடுப்பது ‘வாஜிப்’ என்றோ அல்லது ‘சுன்னத்’ என்றோ ஷரியாவில் வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்த விதியிலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக அது ‘முபாஹ்’ (அனுமதிக்கப்படது) என்ற நியதியின் கீழேயே வருகின்றது.

ஷரியஆ சட்டத்தில், ‘அனுமதிக்கப்பட்டது’ (முபாஹ்) என்று பரிந்துரைக்கப்பட்ட ஒரு விடயத்தை பொது நலன் கறுதி, ஒரு குறிப்பிட்ட நபர் விடயத்தில், ‘கட்டாயமானது’ என்றோ அல்லது ‘தடைசெய்யப்பட்டது’ என்றோ மாற்றலாம். இவ்வாறு செய்வதை ‘மஸ்லஹா முர்ஸலா’ என்று அழைக்கப்படும்.

இதற்காக பல உதாரணங்களை மேற்கோள் காட்டலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு பொது நலனுக்காக திருக் குர்ஆன் தொகுக்கப்பட்டமை அதில் ஒன்று. இதை ஷரியாவை மீறும ஒரு செயலாக இது வiரை எவரும் கூறவில்லை.

அதே போன்று, பொது நலனுக்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை, ‘ஷரிஆ சர்வதேச வர்த்தகத்தில் எந்த தடையையும் விதிக்கவில்லை’ என்ற வாதத்தை முன்வைத்து அது ஷரிஆவை மீறுவதாக வாதிட முடியாது. அதே போல, வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பதற்கான கட்டாயத் தேவை ஷரிஆவிட்கு முறனானது என எவரும் வாதிடுவதில்லை. இது போன்ற பல விடயங்கள் ‘முபாஹ்’ (அனுமதிக்கப்பட்டது) பிரிவின் கீழேயே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே அடிப்படையில், பொது நலனுக்காக மஸ்லஹா முர்சலாஹ் அடிப்படையில், ‘அனுமதிக்கத்தக்கது’ என்ற பிரிவின் கீழ் வரும் குறைந்தபட்ச திருமண வயதெல்லையை நிர்ணயிப்பது ஷரிஆவை மீறுவதாகாது. அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை வாதிடுவது போல ஷரியா அத்தகைய கட்டுப்பாட்டை விதிக்கவில்லை.

ஷரிஆவில் உள்ள ‘இஸ்திக்ரா’ நியதிக்கு ஒத்து, சிறு வயதுத் திருமணம் ‘கட்டாயமானது’ அல்லது ‘பாராட்டத்தக்கது’ என்று ஒப்புக் கொள்ளாமல், ஷரிஆ சட்டத்தின் ஏனைய வசனங்களையும் உட்கருத்துக்களையும் பகுப்பாய்வு செய்யும் போது, பருவம் எய்தாத ஒரு சிறுவன் அல்லது சிறுமியிடமிருந்து திருமணத்திட்கான நியாயமான ஒப்புதலைப் பெறுவது சாத்தியமற்றது என்ற வாதம் உட்பட பல இது போன்ற காரணங்களால் சிறார் திருமணம் இஸ்லாத்தில் ஊக்கப்படுப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

திருமணத்திற்கு முன் மணமகளின் சம்மதத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை பின்வரும் ஸஹீஹான ஹதீஸ் தெளிவாக வலியுறுத்துகின்றனது:

ஒரு மனிதன் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணி, அவள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அந்த திருமணம் ஏற்புடையதாகாது (நூல்: புகாரி, 67:43).

எனவே, அத்தகைய எதிர்மறை தீர்ப்பு ஷரிஆவின் தூய நோக்கமாக இருக்க வாய்ப்பில்லாத ஒரு அபத்தமான முடிவுக்கு வழிவகுக்க இடமுண்டு.

பெண் காஜி நியமனம்

பெண்களை காஜி நீதிபதிகளாக நியமிக்கப்படக்கூடாது என்பதற்கு தெளிவான, கடுமையான விதி எதுவும் ஷரீஆவில் கிடையாது. சூழல் சார்ந்த அர்த்தத்தை விட சொற்பிரவாக அர்த்தத்தின் விளக்கங்களின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களை காஜிகளாக நியமிக்க முடியாது என்ற முடிவிற்கு சிலவேளை அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை வந்திருக்கலாம்.

திருமறை இவ்வாறு கூறுகின்றது:

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமைகள் உண்டு. ஆயினும் ஆண்கள் (உடல் வலிமை போன்ற விடயங்களில்) ஒருபடி உயர்வானவர்களே – சூரா அல்பகரா: 228

மேற்படி வசனம் பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்று கூறவில்லை. மாறாக, பாலினத்தின் உள்ளார்ந்த பலம் மற்றும் பலவீனங்களைக் கருத்தில் கொண்டு சில அம்சங்களில் பெண்கள் மீது ஆண்களுக்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையே குறிக்கின்றது

அத்துடன், பெண்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு தகுதியற்றவர்கள் என்பதை நிரூபிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது:

தங்கள் விவகாரங்களுக்குப் ஒரு பெண்ணை பொறுப்பாக நியமிக்கும் ஒரு சமூகம் ஒருபோதும் சுபிட்சம் பெற மாட்டார்கள்

மேற்படி நபிமொழி ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் போதே மொழியப்பட்டது. எனவே, அதை ஒரு பொதுவான நியதியாகக் கொள்ள முடியாது.

ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு இவ்வளவு வெளிப்படையான விளக்கங்கள் இருந்தன என்பதை ஏற்பதை சற்று இடைநிறுத்தி, ஷரிஆ சட்டத்தை ஒரு விரிவான கண்ணோட்டத்தில் நோக்கும் போது, இது போன்ற சொற்பிரவாக அடிப்படையிலான வாதங்கள் ‘இஸ்திக்ரா’ எனப்படும் ஷரீஆவின் அடிப்படை கோட்பாடிட்கு முறனாவதைக் காணலாம்.

வான்மறை இவ்வாறு கூறுகின்றது:

உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; -சூரா அந்நிஸா 195)

மனித வர்கமே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் -சூரா ஹுஜுராத் 13

மேற்கூறிய மற்றும் ஏனைய பல விடயங்களின் அடிப்படையில், நீதிபதி சலீம் மஸ்ரூஃப் குழுவின் கருத்துக்களை விமர்சிப்பவர்கள், தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சிறு சிறு வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலத்தை சீர்திருத்துவதற்காக ஒன்றுபட்டு செயற்படுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு...