இலங்கையின் முன்னணி மருத்துவரும் சிறுநீரக நிபுணருமான பேராசிரியர் டொக்டர் ரிஸ்வி சரீப்,நேற்று (30) திங்கட்கிழமை தமது 77ஆவது வயதில்கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இலங்கையில் முன்னோடியாக திகழ்ந்த இவர், மூன்று குழந்தைகளின் தந்தையாவார். அன்னாரின் ஜனாஸா இன்று (31) செவ்வாய்க் கிழமை ளுஹர் தொழுகையின் பின்னர் கொழும்பு குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
1948 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பிறந்த, புகழ்பெற்ற மருத்துவர், சிறுநீரகவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர்
கொழும்பு றோயல் கல்லூரியின் (Group of ’59) பழைய மாணவரான இவர், தனது பாடசாலைக் காலத்திலிருந்தே ஒழுக்கம் மற்றும் அறிவாற்றலுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர்.
1985ஆம் ஆண்டில் இலங்கையில் முதலாவது வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கிளினிக்கல் மெடிசின் துறைத் தலைவராகவும், முதுகலை மருத்துவ நிறுவனத்தின் (PGIM) பணிப்பாளராகவும் பணியாற்றி, ஆயிரக்கணக்கான வைத்தியர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான (OxCol) கல்வித் தொடர்புகளை ஏற்படுத்தியதில் இவர் முக்கிய பங்காற்றினார். அத்துடன் பாம்புக்கடி (Snakebite) மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) தொடர்பான இவரது ஆய்வுகள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை.
இலங்கை மருத்துவச் சங்கம் (SLMA) உள்ளிட்ட பல உயரிய அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றி, இலங்கையின் சுகாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றினார்.
மிகப்பெரிய சாதனைகளைச் செய்திருந்த போதிலும், பேராசிரியர் ரெஸ்வி ஷெரீப் அவர்கள் எளிமை, அடக்கம் மற்றும் கருணை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர். தன்னைச் சந்திக்க வரும் எவரிடமும் மிகுந்த கனிவுடன் பழகும் குணம் கொண்டவர்.
அவரது மறைவு குறித்து மருத்துவ உலகமும், அவர் மூலம் உயிர் பெற்ற ஆயிரக்கணக்கான நோயாளிகளும், அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
“இலங்கையின் மருத்துவ உலகின் ஒரு மாபெரும் ஆளுமையான பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, உயரிய சுவனபதி எனும் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்கியருள்வானாக.”
