ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

Date:

-முஹம்மத் பகீஹுத்தீன்

இஃதிகாப் என்றால் என்ன?

பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தலே இஃதிகாப் என்பதாகும்.

இது ஒரு சுன்னாத்தான அமலாகும். குறிப்பாக ரமழான் மாத்தில் அதி கூடிய முக்கியத்துவம் செலுத்தப்பட் வேண்டிய ஒரு வணக்கமாகும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் அலை அவர்களும் இஃதிகாப் என்ற வணக்க வழிபாட்டை கடைப்பிடித்து வந்த செய்தியை அல்குர்ஆன் ஸுரா பகராவில் 125ம் வசனம் கூறுகிறது. அவ்வாறே மர்யம் (அலை) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஃதிகாப் இருந்த வராற்றை ஸுரா ஆல-இம்ரான் கூறுகிறது.

எனவே இஃதிகாப் என்பது முன்னைய நபிமார்கள் காலத்தில் இருந்து தொண்டு தொட்டு வழிபட்டு வந்த ஒரு வணக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இஃதிகாபின் சிறப்புகள்

ரமழான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இஃதிகாபின் வகைகள்

இஃதிகாப் இரண்டு வகைப்படும்.

1) வாஜிப்:
யார் இஃதிகாப் இருப்பதாக நேர்சை வைக்கின்றாரோ அவர் மீது இஃதிகாப் வாஜிபாகும். உமர் (றழி) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு நாள் இரவு முழுவதும் இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது ‘உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று நபிகளார் கூறினார்கள். (புகாரி)

2) சுன்னதான இஃதிகாப்:

ஒருவர் நன்மையை நாடியும், இறை திருப்தியை வேண்டியும் பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது விரும்பத்தக்க ஒரு அமலாகும். ‘ நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.’ என அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( புகாரி)

இஃதிகாப் இருப்பதற்கான காலம்

இஃதிகாப் இருப்பதற்கென்று குறிப்பிட்ட காலம் கிடையாது. எப்போதும் இருக்கலாம். எவ்வளவு நேரமும் இருக்கலாம். ஆனால் இஃதிகாப் இருப்பதை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்.

சுன்னத்தான இஃதிகாப் இருப்பவர்களுக்கு கால வரையரை கிடையாது. இஃதிகாப் இருக்கும் நிய்யத்தோடு கொஞ்சம் நேரம் பள்ளிவாசலில் தங்கியிருந்தாலும் அது நிறைவேறும். அவ்வாறே ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்த நிலையில் இடையில் முறித்துக் கொள்ளவும் முடியும்.

எப்போது ஆரம்பிப்பது:

ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருப்பதாக நிய்யத் வைத்தால் அவர் மஃரிப் நேரத்துடன் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை இருக்கவேண்டும் என்பதே பெரும்பாலன இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.

ஆனால் பஜ்ர் நேரம் உதயமாக முன்னர் அவர் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் அதுவும் ஒரு நாளாக கணிக்கப்பட முடியும் என வேறுசில அறிஞர்கள் கருதுகின்றனர். நபிகளார் (ஸல்) அவர்கள் இஃதிகாப் நோக்கத்துடன் மக்ரிப் நேரத்தில் மஸ்ஜதில் நுழைந்தாலும் கூட பஜ்ர் தொழுகைக்கு பின்னரே இஃதிகாபை ஆரம்பித்தார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

‘நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பதற்கு நாடினால் பஜ்ர் தொழுகையை முடித்தவுடன் தனக்குரிய பிரத்தியேகமான இடத்தில் ஒதுங்கிவிடுவார்கள்’. அவ்வாறே இந்த ஹதீஸ் இஃதிகாப் இருப்பவர்கள் பஜ்ருக்கு பின் தனியான இடமொன்றை ஒதுக்கி அதில் தரிப்பதும் நபி வழி என்பதையே காட்டுகின்றது.

எனவே ஒரு நாள் இஃதிகாப் இருப்பது என்பது மக்ரிப் தொழுகையுடன் அல்லது சுபஹ் தொழுகையுடன் ஆரம்பித்து மறுநான் மக்ரிப் தொழுகையுடன் முடிப்பதாகும்.

இஃதிகாபின் ருகூன்கள் (கடமைகள் )

1) நிய்யத: எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்ற ஹதீஸ் நிய்யத் கட்டாயம் என்பதை வலியுறுத்துகின்றுது.

2) பள்ளிவாசலில் தரித்திருத்தல்: குறிப்பிட்ட பள்ளியொன்றில் தரிக்கும் போது அல்லாஹ்வுக்காக இஃதிகாப் இருக்கின்றேன் என்ற எண்ணத்தை வரவழைப்பது கட்டாயமாகும்.

இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசல்கள்

இஃதிகாப் இருப்பதற்கு பொருத்தமான இடம் பள்ளிவாசலே என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது. ‘ இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்’ (சூரா பகரா: 187)

இந்த அல்குர்ஆன் வசனம் இஃதிகாப் இருக்குமிடம் மஸ்ஜித் என்று மட்டுமே கூறுகிறது. எனவே ஜும்மா பள்ளியில் மாத்திரம் அல்லது மக்கா, மதீனா, மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல்களில் மாத்திரம் என வரையரை எதுவும் கிடையாது. ஏனைய பள்ளிவாசலகளை விட இந்த மூன்று பள்ளிவாசல்களும் மிகவும் சிறப்புக்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் போன்றோரின் கருத்துப் படி ஐவேளை தொழுகை நடைபெறுகின்ற எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம்.

இமாம் ஷாபிஈ, இமாம் மாலிகி போன்றோரின் கருத்துப்படி ‘எந்த பள்ளிவாசலிலும் இஃதிகாப் இருக்கலாம். ஐவேளையும் தொழுகை நடைபெற வேண்டும் என்ற நிபந்தனை கூட கிடையாது. ஆனால் ஜும்மா தொழுகை நிறைவேற்றப்படும் பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது மிகவும் சிறந்ததாகும்.

காரணம் ஜும்ஆ தொழுகைக்காக வெளியேறிச் செல்லும் தேவை கூட ஏற்படாது.

பெண்கள் இஃதிகாப் இருத்தல்

ஆண்களைப் போன்றே பெண்களும் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பது சுன்னத்தான ஒரு அமல். நபி (ஸல்) அவர்கள், மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

எனவே பெண்களும் ஆண்களைப் போன்றே பள்ளிவாசலில் தான் இஃதிகாப் இருக்க வேண்டும் என்பது பொதுவான சட்ட ஒழுங்காகும். அதுவே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துமாகும்.

ஆனால் பெண்கள் தங்களது வீடுகளில் தொழுகைக்காக ஒதுக்கியுள்ள அறைகளில் இஃதிகாப் இருக்க முடியும் என வேறு சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

புனித ரமழான் மாதத்தின் மகத்தான பாக்கியங்களை அடைந்து கொள்வதில் பெண்களுக்கான வாய்ப்பு வசதிகள் மூடப்படக்க கூடாது என்பதால் இந்தக் கருத்து மிகவும் பொறுத்தமானதே. இறைதொடர்பும், உளத்தூமையும் இஃதிகாபின் பிரதான இலக்காககும். பெண்களின் தொழுகை அறையில் இஃதிகாப் இருப்பதால் இந்த நோக்கம் நிறைவேறுகிறது.

ஹனபி மத்ஹபின் கருத்துப்படி பெண்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதைவிட தங்களது வீட்டு தொழுகை அறையில் இருப்பதே மிகவும் சிறந்ததாகும் என்றும் கூறியுள்ளனர். இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்து வேறுபாடுகள் சமூகத்திற்கு அருளாகவே உள்ளன. நெருக்கடியான சந்தர்பங்களில் பரந்த விரிந்த பாதைக்கு வழிகாட்டுகின்ற.

நோன்பும் இஃதிகாபும்

நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது. ரமழான் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பதில் நபி (ஸல்) அவர்கள் கூடிய கரிசனை காட்டியுள்ளதோடு அதனை தூண்டியுமுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பின்றி இஃதிகாப் இருந்ததில்லை என ஆயிஷா (றழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் இஃதிகாப் இருப்பதற்கு கட்டாயம் நோன்பு வைக்கவேண்டும் என்பது பொருள் அல்ல. மாறாக ரமழான் அல்லாத ஏனைய மாதங்களிலும் நோன்புடன் இஃதிகாப் இருப்பது விரும்பத்தக்கது என்பதயே அது உணர்த்துகிறது. எனவே ரமழான் அல்லாத மாதங்களில் இஃதிகாப் இருப்பவர் விரும்பினால் நோன்பு பிடிக்கலாம் விரும்பினால் நோன்பின்றி இஃதிகாப் இருக்கலாம்.

இஃதிகாப் ஏன்:

மனித உள்ளம் அல்லாஹ்வை நோக்கி பயணிப்பது
ரப்பானிய பயணமாகும். அந்த ரப்பானிய பயண்தை மேற்கொண்டு இறை தொடர்பை அதிகரித்து, உள்ளத்தை சீர் செய்து கொள்வதே இஃதிகாபின் மிகப் பிரதான நோக்கமாகும்.

அவ்வாறே இஃதிகாப் இருப்பதால் இன்னும பல உயர் இலக்குகளை அடையலாம்.

* புனித லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ளுதல்
* மக்களை விட்டும் ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருங்குதல்
* வணக்க வழிபாடுகளில் மாத்திரம் முற்றுமுழுதாக ஈடுபடல்
* ஆசைகளை விட்டு தூரமாகி நோன்பைப் பாதுகாத்தல்
* உலக விவகாரங்களில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்டு பற்றற்று வாழ பழுகுதல்

இஃதிகாப் இருக்கும் போது:

இஃதிகாப் இருப்பதிலிருந்து பூரண பயன் அடைந்து கொள்ள விரும்பும் ஒருவர் வீணான பேச்சுக்களை விட்டும் தவிர்ந்து கொண்டு தொழுகை. குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற இபாதத்களிலேயே கழிக்கவேண்டும்.

தனியாக இஃதிகாப் இருப்பது போலவே கூட்டாகவும் பலர் சேர்ந்து இஃதிகாப் இருக்கலாம். ஆனால் கூடிக்கதைத்து அதன் பலனை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழுக்களாக இருந்து குர்ஆன் விளக்கங்களை, சன்மார்க்க சட்டங்களை, ஸீராவை மற்றும் பயனுள்ள புத்தகங்களையும் படிக்க முடியும்.

இஃதிகாப் இருப்பவரை பாதிக்காத செயற்பாடுகள்.

1) மனைவியை வழியனுப்புவதற்காக வெளியேறுதல். நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் சமயத்தில் தேவையின் நிமித்தம் நபியவர்களிடம் வந்த அவர்களது மனைவி ஸபிய்யா (றழி) அவர்களை வீடுவரை சென்று வழியனுப்பினார்கள்.

2) முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல், இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்.

3) மலம் ஜலம் போன்ற அவசியத் தேவைக்காக பள்ளியை விட்டும் வெளியேறலாம்.

4) உண்ணுதல், பருகுதல், தூங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

5) ஜும்மா தொழுகைக்காக, நோயாளியை தரிசிப்பதற்காக, ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக வெளியேறுவதை அலி (றழி) அவர்கள் விரும்பத்தக்கதாக கருதியுள்ளார்கள்.

இன்னும் சில ஸஹாபாக்கள் இஃதிகாபின் போது சமூக நலப் பணிகளில் கூட ஈடுபட்டுள்ளார்கள். உண்மையில் இஸ்லாத்தில் துறவரம் என்பது கிடையாது. இஃதிகாப் என்ற பெயரில் சமூக உறவை முற்று முழுதாக அறுத்துவிடக் கூடாது என்பதையே இது காட்டுகின்றது.

இஃதிகாபின் விளைவு

இஃதிகாப் தேவையற்ற சகவாசம், அதிகமாக தூங்குதல், நாவினால் ஏற்படும் பாவங்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதுடன் இறை நினைவோடு வாழ்வதற்கும் அல்குஆன் ஓதுவதற்கும் அல்லாஹ்வை பற்றி சிந்திப்பதற்கும் அதிகமாக தொழுவதற்கும் இன்னும் பல வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் துணை செய்கின்றது.

இஃதிகாபை முறிக்கும் கருமங்கள்

1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்.

3) மயக்கம் அல்லது மனநோய் காரணமாக புத்தி நீங்குதல்.

இஃதிகாப் விட்டுச் செல்லும் தடயங்கள்

1) மஸ்ஜிதை விரும்புதல். உள்ளம் அதனோடு தொடர்புபடுதல்

2) தொழுகைக்காக காத்திருத்தல். அந்த வகையில் மலக்குகளின் பிராத்தனைக்கு உட்படுதல்.

3) உலக இன்பங்களை விட்டு தூரமாகுதல்.

4) தீங்கிழைக்கும் பழக்க வழக்கங்களை களைதல்

5)மனக்கட்டுப்பாட்டிற்கும் பொறுமைக்கும் பழகுதல்

6) பாவங்களை விட்டும் தூரமாகி தௌபா செய்யும் பழக்கம் எற்படுதல்

7) உளச் சீர்திருத்தமும் மன அமைதியும் கிடைக்கும்

8) குர்ஆனுடனான நெருங்கிய தொடர்பு

கவனிக்க

முறையாக விடுமுறை எடுக்காமல் தொழிலை விட்டு விட்டு அல்லது பெண்கள் தமக்குள்ள கடமையான பணிகளை கவனிக்காமல் இஃதிகாப் இருப்பது அங்கீகரிக்க முடியாத செயலாகும். ஒரு சுன்னத்தான அமலை செய்வதற்காக அதைவிட முதன்மைப்படுத்த வேண்டிய கடமைகளை விட்டுவிடுவது ஏற்புடையதல்ல.

எனவே இந்த விடயத்தில் நலன்களை எடை போட்டுப் பார்த்து முன்னுரிமை வழங்கவேண்டிய விடயத்தில் கவனமெடுத்து நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கக்கூடும் : ஐ.நா சபை எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait...