அமெரிக்காவின் தாக்குதலால் விபத்துக்குள்ளான IRIS DENA கப்பலிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை ஒப்படைக்குமாறு ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அந்தச் சடலங்களை அவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும், விபத்துக்குள்ளான கப்பல் தற்போது வரையில் இலங்கை தரைப்பகுதியிலிருந்து 09 கடல் மைல்தொலைவில் இருப்பதாகவும் கப்பலின் எஞ்ஜினில் கோளாறு இருப்பதால் இலங்கை கடற்படையால் அந்தக் கப்பலைப் பொறுப்பேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்ற அமைச் சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
‘‘மத்திய கிழக்கு போர் விடயத்தில் நாங்கள் நடுநிலையான அரசு. இந்த யுத்தத்தில் நாங்கள் பங்குபற்றவில்லை. நடுநிலையான அரசு என்ற அடிப்படையில் சமுத்திர சட்டதிட்டங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறோம். இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 84 சடலங்கள் இலங்கை அரசின் பொறுப்பிலேயே இருக்கிறது. ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அந்த சடலங்களை ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதேபோன்று, மேலும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேர் கடற்படையின் பொறுப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நடுநிலை அரசொன்று செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக சட்டங்கள், ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் செயற்பட தயாராக இருக்கிறோம்.
அதேபோல் இரண்டாவது கப்பலிலிருந்து இலங்கை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது கடற்படையின் பொறுப்பிலிருக்கும் 206 ஈரானியர்கள் தொடர்பிலும் தற்போது அமுலில் இருக்கும் சட்ட, ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.
இந்த சடலங்கள் எமது நாட்டில் இருக்கும் வரையும் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் எமது பொறுப்பில் இருக்கும் வரையும் அவர்களுக்கு அவசியமான தேவைகளை வழங்குவதற்கும் செலவுகளை செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதுவே அரசாங்கத்தின் தீர்மானமாகும். நடுநிலை அரசு என்ற அடிப்படையிலேயே இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடல் மைல்களில் அளவெடுத்தால் எமது கடல் எல்லையையும் பொருளாதார வலயத்தையும் புரிந்துகொள்ள முடியும். நாமல் ராஜபக்ஷவின் மைல்களின் அடிப்படையில் அளவெடுத்தால் மாத்திரமே இந்தத் தாக்குதல் எமது கடல் எல்லையில் நிகழ்ந்ததாக கருத்திற்கொள்ள முடியும்.
12 கடல் மைல் தொலைவே எமது எல்லை. அதற்கு அப்பால் பிரத்தியேக பொருளாதார வலயமாகும். அவ்விடத்தில் பொருளாதாரம் சார்ந்த எமது உரிமையே இருக்கிறது. கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் எமது தலையீடு இருக்காது. அந்தப் பகுதியை சகல நாடுகளும் பயன்படுத்த முடியும். ஆனால் இந்தத் தாக்குதல் இடம்பெற்ற கப்பல் எமது கடல் எல்லையில் இருக்கவில்லை. 12 கடல் மைல்தொலைவுக்கு அப்பாலே இந்த கப்பல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்தியாவில் இடம்பெற்ற கடற்படை பயற்சி நடவடிக்கைகளுக்காக உலகின் பல்வேறு நாடுகள் பங்குபற்றியிருந்தன. பெப்ரவரி 26 ஆம் திகதி குறித்த ஈரான் கப்பல்களும் மார்ச் 09 – 13 ஆம் திகதிகளில் நட்புறவு வருகைக்காக கோரப்பட்டுள்ளது. இதுபோன்ற பயிற்சி நடவடிக்கைகளின்போது ஒரே கடற்படையை சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்திருக்க முடியும். ஆனால் அது விசேட அழைப்பும் இல்லை. எமது நாட்டை கடந்துச் செல்லும்போது 09 – 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அதற்கு அப்பால் வேறு தகவல்கள் கிடைத்திருக்கவில்லை.
இரு நாடுகள் போர் செய்யும்போது மூன்றாம் தரப்புக்கு அதுதொடர்பான தகவல்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே இந்தத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து தாக்குதல் தொடர்பான எதுவித தகவலும் கிடைக்கவில்லை. கடற்படைக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என்பது எமக்கு தெரியாது. ஆனால், அங்கிகள் மற்றும் சடலங்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தற்போது, இலங்கை தரைப்பகுதியிலிருந்து 09 கடல் மைல்தொலைவில் விபத்துக்குள்ளான கப்பல் இருக்கிறது. கப்பலின் எஞ்சினில் கோளாறு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, எஞ்சின் பிரச்சினைக்கு தீர்வுகொண்டவுடன் கடற்படையினால் பொறுப்பேற்று அதனை திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தப் பிரச்சினையில் தீர்மானம் எடுக்கும் விடயத்தில் இலங்கையின் சுயாதீனத் தன்மை குறித்து அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. ஆகவே, நடுநிலையான அரசு என்ற அடிப்படையில் ஒரு தரப்புக்கு பக்கச்சார்பாகவோ அல்லது இன்னுமொரு தரப்புக்கு அநீதி இழைக்கும் வகையிலோ தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தயாராக இல்லை’’ என்றார்.
