இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்துக்கு இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம் கண்டனம்: உடனடியாக ரத்து செய்யவும், அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.

Date:

இஸ்ரேலியர்களுக்கு எதிராக கொடிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை இஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியதை இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம் (SLCSP) வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், அதனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறது.

மார்ச் 30 ஆம் திகதி 62-48 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், இராணுவ நீதிமன்றங்களில் பலஸ்தீனியர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

அங்கு, பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன, சட்ட உதவிகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, இந்த நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுவதற்கான விகிதம் கிட்டத்தட்ட 100% ஆக உள்ளது. இது அரச பயங்கரவாதத்தின் பாரபட்சத்தைக் காட்டுவதற்கான கருவியாகும்.

இது, இன மற்றும் தேசிய அடிப்படையில் கொலை செய்வதற்கான அனுமதியை வழங்குகிறது. அதே சமயம், பலஸ்தீனியர்களுக்கு எதிராக பெரும்பாலும் முழுமையான தண்டனையின்றி கொடிய தாக்குதல்களை வழக்கமாக நடத்துகின்ற இஸ்ரேலிய யூதக் குடிமக்களுக்கோ அல்லது குடியேறிகளுக்கோ இதற்கு இணையான தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது ஒரு போர்க்குற்றமாகவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் அமையும்.

பெருவாரியாக சிறைவாசங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு மத்தியில் இது அரங்கேறுகிறது. அங்கு 9,300-க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வாடுகின்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் குற்றச்சாட்டுக்களோ விசாரணைகளோ இன்றி நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 350-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், தற்போது மரண தண்டனை விதிக்க அதிகாரம் பெற்ற அதே முறைகேடான நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபை, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் பி’ட்செலெம் உள்ளிட்ட முன்னணி மனித உரிமை அமைப்புகள், பலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகளை சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்பாகுபாடு என்று கருதியுள்ளன.

இந்தச் சட்டம் அந்த யதார்த்தத்தை உறுதிப்படுத்துவதோடு, மக்களில் ஒரு சாராருக்குத் தண்டனையிலிருந்து விலக்கும் மற்றொரு சாராருக்கு மரணதண்டனையும் என்ற இரட்டை நிலைப்பாட்டை உத்தியோகபூர்மாக்குகிறது.

பலஸ்தீனுடனான நட்புறவுக்கான இலங்கை குழு, இஸ்ரேலிய அரசாங்கம் இந்தச் சட்டத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் ரத்து செய்ய வேண்டும் என்றும்; ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளான ஐ.நா. பாதுகாப்பு சபை, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை கண்டனங்களையும் கவலைகளையும் தெரிவித்து அறிக்கை விடுவதற்கு அப்பால் சென்று, பொறுப்புக்கூறல் வழிமுறைகளைச் செயல்படுத்துதல், தொடர்புடைய சர்வதேச சட்ட அமைப்புகளுக்குப் பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் மீதான கடப்பாடுகளை நிறைவேற்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறது.

இவ்விஷயத்தில் இலங்கை அரசாங்கம் தெளிவானதும் கொள்கை ரீதியானதுமானதொரு நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்றும், சர்வதேச சட்டத் தரங்களுக்கு ஆதரவாக இராஜதந்திர ரீதியாகச் செயற்பட வேண்டும் என்றும் பலஸ்தீன நட்புறவுச் சங்கம் கோருகிறது.

காஸாவிலும், மேற்குக் கரையிலும், ஜெருசலேமிலும், ஆக்கிரமிப்பாளர்களின் சிறைகளிலும் உள்ள பலஸ்தீன மக்களுடன் இலங்கைப் பலஸ்தீன நட்புறவுச் சங்கம் தனது அசைக்க முடியாத ஆதரவைத் தெரிவிக்கிறது.

அவர்களின் வாழ்வுக்கும், கண்ணியத்திற்கும், நீதிக்குமான உரிமை பேரம் பேசக்கூடியதல்ல. அவர்களின் உயிர்கள் மற்ற உயிர்களைப் போலவே சமமான மதிப்பைக் கொண்டுள்ளன. இதற்கு மாறான ஒரு சட்டத்திற்கு, நீதி என்று பெயர் சூட்டிக்கொள்வதற்கு எந்தவொரு அமைப்பிலும் இடமில்லை.

-பலஸ்தீனுடனான நட்புறவுக்கான இலங்கை குழு-

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...