தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நிறுத்தும்படி விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பதிலளிக்கத் தவறியதால், டூஸ்கா (TOUSKA) என்ற ஈரானிய கப்பலை அமெரிக்கக் கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் எழுதியுள்ளார்.
அதேநேரம், இந்த நடவடிக்கை போர் நிறுத்த மீறல் என்றும், இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளை செயலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றொரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
தெஹ்ரான் தனது பங்கேற்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்க முற்றுகை அமுலில் இருக்கும் வரை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் கடற்படை முற்றுகையை அறிவித்தார்.
மறுபுறம், ஈரான் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ட்ரோன் மூலம் பதில் தாக்குதலையும் தொடங்கியுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா ராணுவ தளத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இத்தகவலை ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
