உயர்தரப் பெறுபேறுகளுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ள கல்வி மற்றும் தொழிற்றுறை வாய்ப்புகள்

Date:

-ஜெஸார் ஜவ்பர்-
1. அறிமுகம்
ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்

இலங்கையின் கல்விப் புலத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பது வெறும் ஒரு பரீட்சை மட்டுமல்ல; அது பல வருட கால உழைப்பு, கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஒரு ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்.

இந்தப் பெறுபேறுகள் வெளியானவுடன், சமூகமும் சூழலும் இதனை ஒரு “வெற்றி-தோல்வி” சார்ந்த முடிவாகவே பார்க்கின்றன. ஆனால், யதார்த்தத்தில் உயர்தரப் பெறுபேறு என்பது ஒரு முடிவு அல்ல; அது உங்கள் எதிர்காலத்திற்கான ஒரு புதிய வாசலைத் திறந்துவிடும் தொடக்கப் புள்ளி மட்டுமே.

ஒவ்வொரு மாணவனின் பெறுபேறு அட்டையிலும் உள்ள குறியீடுகள் (Grades) அந்த மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையையோ அல்லது எதிர்கால வெற்றியையோ தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்புகள் அல்ல.

இலங்கையின் தற்போதைய கல்வி மற்றும் தொழிற்றுறை பரப்பானது, ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பெறுபேறுகளுக்கு அப்பால் எண்ணற்ற வாய்ப்புகளை அள்ளித் தருகிறது.

பெறுபேறுகள் வேறுபடலாம், ஆனால் இலக்குகள் வேறுபாடாது:

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர் ஒரு பாதையில் பயணிப்பார்; அதேநேரம் அந்த வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர், தொழில்நுட்பக் கல்வி அல்லது தொழிற்சார் பட்டப்படிப்புகள் மூலம் அதே இலக்கை வேறொரு பாதையில் சென்றடைய முடியும்.

உங்கள் பெறுபேறுகள் எவ்வாறாக அமைந்திருந்தாலும், அவை 3A ஆக இருக்கலாம் அல்லது சாதாரண சித்தியாக இருக்கலாம், நீங்கள் சாதிப்பதற்கு இலங்கையில் இன்று பல உயர்கல்வித் தெரிவுகள் காத்திருக்கின்றன.

எனவே, இந்தப் பெறுபேறுகளைக் கண்டு நீங்கள் திகைத்து நிற்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கதவு மூடப்படும்போது, இன்னும் பத்து புதிய ஜன்னல்கள் உங்களுக்காகத் திறக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து, அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம்.

இந்தப் பயணத்தில் நீங்கள் தனியானவர்கள் அல்ல; உங்கள் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் இதோ…

2. சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகள்

பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான தகுதியைப் பெற்ற (Z-Score அடிப்படையில்) மாணவர்கள், தமக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள சில முக்கிய படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அ. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) கையேடு

பெறுபேறுகள் வெளியானவுடன் மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது, அந்த ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேட்டை (Hand Book) முழுமையாக வாசிப்பதாகும். இதில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பாடநெறிகள், அவற்றுக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் விரிவாகத் தரப்பட்டிருக்கும்.

கடந்த வருட அனுமதிக் கையேடு

 

Z-புள்ளி மற்றும் தரவரிசை: உங்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்ட தரவரிசையைப் புரிந்துகொண்டு, கடந்த காலங்களில் அந்தப் புள்ளிக்கு எவ்வகையான பாடநெறிகள் கிடைத்துள்ளன என்பதை ஒருமுறை ஆராயுங்கள்.

கடந்த வருட இஸட் புள்ளிகள்
ஆ. பாடநெறிகளை முன்னுரிமைப்படுத்துதல் (Ranking of Courses)

விண்ணப்பப்படிவத்தில் பாடநெறிகளைத் தெரிவு செய்யும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

விருப்பம் Vs வாய்ப்பு: உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடநெறியை முதலாவதாகப் பதிவிடுங்கள். எனினும், உங்கள் புள்ளி மட்டத்திற்கு கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ள பாடநெறிகளையும் வரிசைப்படுத்த மறக்காதீர்கள்.

பல்கலைக்கழகத் தெரிவு: ஒரே பாடநெறி வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும்போது, உள்கட்டமைப்பு வசதிகள், வதிவிட வசதி மற்றும் அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரிசைப்படுத்துங்கள்.

இ. தகவல் துல்லியம்
விண்ணப்பங்களை இணையவழியாகப் (Online) பதிவேற்றும்போது உங்கள் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பெறுபேறுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

ஏதேனும் ஒரு விபரத்தில் தவறு ஏற்பட்டால் அது உங்கள் பல்கலைக்கழக அனுமதியை பாதிக்கக்கூடும் என்பதால், சமர்ப்பிப்பதற்கு முன் (Final Submit) இருமுறை சரிபார்ப்பது அவசியம்.

3. பெறுபேறுகளில் அதிருப்தி உள்ளவர்களுக்கான வாய்ப்புகள்

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காத மாணவர்களுக்கு இரண்டு முக்கியமான தெரிவுகள் உள்ளன:

அ. விடைத்தாள் மீள் திருத்தம் (Re-correction)

நீங்கள் பரீட்சையை மிகச்சிறப்பாக எழுதியும், அதற்கேற்ற பெறுபேறு கிடைக்கவில்லை எனத் திடமாக நம்பினால், காலதாமதமின்றி மீள் திருத்தத்திற்கு (Re-evaluation) விண்ணப்பியுங்கள்.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. சிறிய புள்ளி மாற்றம்கூட உங்கள் இஸட் புள்ளியில் (Z-Score) பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பல்கலைக்கழக அனுமதியை உறுதி செய்யக்கூடும்.

விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பம்
ஆ. மீண்டும் ஒரு முயற்சி (Next Attempt)

“தோல்வி என்பது வெற்றியின் முதல் படி.” ஒருமுறை கிடைத்த பெறுபேறு உங்களின் முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை என நீங்கள் கருதினால், அடுத்த பரீட்சைக்குத் தயாராகுங்கள்.

கடந்த முறை எங்கே தவறு நடந்தது? நேர முகாமைத்துவமா? அல்லது குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் தெளிவின்மையா? என்பதை ஆராய்ந்து படிக்கத் தொடங்குங்கள்.

தற்போது உங்களிடம் அனுபவம் உள்ளது. அதை மூலதனமாகக் கொண்டு புதிய உத்வேகத்துடன் களம் இறங்குங்கள்.

மீண்டும் உயர்ததரத்திற்கு தயாராகுவதற்கான அனைத்து கற்றல் வழங்களையும் இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ள முடியும்.

2026 க.பொ.த உயர் தரப் பரீட்சை விண்ணப்பம்
4. மாற்று உயர்கல்வி வழிகள் (பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவிடத்து)

உயர்தரப் பெறுபேறுகள் அரச பல்கலைக்கழகங்களின் நேரடி நுழைவுக்கு (Internal Entry) போதுமானதாக இல்லாவிட்டாலும், பட்டப்படிப்பைத் தொடர பல தகுதியுள்ள அரச நிறுவனங்கள் வழிகாட்டுகின்றன.

1. திறந்த பல்கலைக்கழகம் (OUSL):

இது வேலை செய்துகொண்டே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இங்கு பொறியியல், சட்டம், கல்வி, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களைப் பெறலாம்.

உங்கள் விருப்பு வெறுப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப தெரிவு செய்வதற்கான பாடநெறிகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்
2. ஏனைய பல்கலைக்கழகங்கள்:

கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர, களனி, பேராதனை, யாழ்ப்பாண, தென்கிழக்கு மற்றும் கிழக்கு போன்ற பல்கலைக்கழகங்கள் வர்த்தகம் (B.Com), கலை (BA), மற்றும் தகவல் தொழில்நுட்பம் (BIT) போன்ற துறைகளில் வெளிவாரி பட்டப்படிப்புகளை வழங்குகின்றன.

விபரங்களைப் பெறலாம்
3. இலங்கை சட்டக் கல்லூரி (Sri Lanka Law College)

நீதித்துறை மற்றும் சட்டத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு இலங்கை சட்டக் கல்லூரி ஒரு கௌரவமான நுழைவாயிலாகும். சட்டத்தரணியாக (Attorney-at-Law) பதிவு செய்வதற்கு இலங்கையில் உள்ள ஒரேயொரு நிறுவனம் இதுவேயாகும்.

நுழைவுத் தேர்வு (Entrance Exam): உயர்தரத்தில் எந்தப் பாடத்துறையில் (Arts, Commerce, Science, Maths, Technology) பயின்ற மாணவர்களும் இதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (2C+S) போதுமானது. அத்துடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் (தமிழ்/சிங்களம்) திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.

போட்டிப் பரீட்சை மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பம் மற்றும் விரபங்கள்
4. உயர்தேசிய டிப்ளோமா (HND – SLIATE)

இலங்கை மேலதிக கற்கைகளுக்கான நிறுவனம் (SLIATE) நாடு முழுவதும் உள்ள தனது உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் (ATI) ஊடாக 15 HND பாடநெறிகளை வழங்குகிறது.

இவை 2 முதல் 3 வருட கால பாடநெறிகளாகும்.

Accountancy, IT, Engineering, English, Agriculture, Management போன்ற துறைகளில் இவை வழங்கப்படுகின்றன.

5. தொழிநுட்பக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் (UNIVOTEC & University Colleges)

நடைமுறைச் சாத்தியமான (Practical) கல்வியை விரும்பும் மாணவர்களுக்கு இது மிகச்சிறந்த தெரிவு.

UNIVOTEC: உயர்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வழங்கும் 17 வகையான பட்டப்படிப்புகள் (B.Tech/ B.Ed) மாணவர்களுக்குத் தொழிற்றுறை சார்ந்த நிபுணத்துவத்தை வழங்குகின்றன.

6. பல்கலைக்கழகக் கல்லூரிகள் (University Colleges):

இங்கு NVQ மட்டம் 5 மற்றும் 6 வரையான டிப்ளோமாக்களைப் பெற்று, பின்னர் பட்டப்படிப்பிற்குத் தகுதி பெறலாம்.

7. இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் (Ocean University)

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் வளத்தைப் பயன்படுத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில்:

கடல்சார் பொறியியல் (Marine Engineering), மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு (Fisheries and Aquaculture) போன்ற விசேட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம்.

இங்கு உள்வாரி பட்ட பாடநெறிகளும் வௌிவாரி பட்டப் பாடநெறிகளும் உள்ளன
உள்வாரி பாடநெறிகள் – https://1teachmore.lk/degree-applications-2025-ocean…/

வௌிவாரி பாடநெறிகள் – https://1teachmore.lk/ocean-university-external-degree…/

 

8. தேசிய கல்வியியல் கல்லூரிகள்
ஆசிரியர் பணியை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு இதுவே சிறந்த வழி.

உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

மூன்று வருடப் பயிற்சியின் பின்னர் நேரடியாக அரச ஆசிரியர் நியமனம் பெற முடியும்.

கடந்த வருட அனுமதிக்கான வர்த்தமானி மற்றும் விண்ணப்ப விபரங்கள்
9. நிதிச் சுமையின்றி தனியார் உயர்கல்வி (வட்டியற்ற கடன் திட்டம்) Interest-Free Student Loan Scheme (IFSLS)

பொருளாதார வசதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு அற்புதமான திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தியடைந்த (3S), ஆனால் அரச பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

NSBM, SLIIT, CINEC, ICBT போன்ற 18 அங்கீகரிக்கப்பட்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பைத் தொடர வட்டியற்ற கடன் வழங்கப்படுகிறது.

இக்கடனைப் பட்டப்படிப்பை முடித்து வேலைக்குச் சென்ற பின்னரே மீளச் செலுத்தத் தொடங்க வேண்டும்.

Interest-Free Student Loan Scheme (IFSLS) 2025
10. தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் ஏனைய வாய்ப்புகள்
தொழினுட்பக் கல்லூரிகள் (Technical Colleges): சித்தியடையத் தவறிய அல்லது குறைந்த சித்தி பெற்ற மாணவர்கள் இங்கு பல்வேறு தொழிற்சார் பாடநெறிகளை (NVQ 3, 4) கற்று, கைநிறையச் சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறலாம்.
Technical Colleges Admission 2026: 199 Vocational Courses
NVQ Level 04 Courses – Technology Stream Students
Updated
11. சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவகம்
National Institute of Social Development

சமூக அபிவித்திக்கான தேசிய நிறுவகம் சமூக சேவையில் பட்டப் பாடநெறியை வழங்கி வருகிறது.

தற்போது நிறுவன கட்டமைப்பு மறுசீரமைப்பு இடம்பெற்று வருகிறது. பெரும்பாலும் களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவனமாக எதிர்வாலத்தில் பட்டங்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

முழு நேர பட்டப் படிப்பு (இலவசம்) – https://1teachmore.lk/bachelor-of-social-work-bsw-hons…/

வௌிவாரி பகுதி நேர (கட்டணம்) – https://1teachmore.lk/bachelor-of-social-work-bsw…/

 

12. கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் Kotelawala Defence University (KDU)

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் பல்வேறு பட்டப் படிப்புக்களை வழங்கி வருகிறது. பாதுகாப்புச் சேவையில் இணைந்து பணியாற்றுதல் போன்ற சில நிபந்தனைகள் சில பாடநெறிகளுக்கு உண்டு. பாடநெறிக் காலத்தில் மாதாந்தம் ஒரு லட்சம் வரையான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் சில பாடநெறிகளுக்கு வழங்கப்படுகின்றன.

காலத்தின் அவசியம்

மாணவர்களே! உயர்தரப் பெறுபேறுகள் என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அது ஒரு கமா (Comma) மட்டுமே. மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் உங்கள் ஆங்கில அறிவு மற்றும் கணினித் திறன்களை (IT Skills) வளர்த்துக்கொண்டால், இன்னும் சில வருடங்களில் நீங்கள் ஒரு வெற்றிகரமான பட்டதாரியாகவும், தேடப்படும் ஒரு நிபுணராகவும் உருவெடுக்க முடியும்.

இணையத்தளத்தில் வாசிக்க – https://edunews.lk/781/
இன்றே திட்டமிடுங்கள், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83 ஆவது வயதில் காலமானார்...

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன...

இரண்டு மாதங்களில் 1,480 மில்லியன் டொலர் வருமானம்!

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம்...

ஏயார்பஸ் ஊழல் விவகாரம்: ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை!

ஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்...