பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரபல எழுத்தாளரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் ஸ்தாபகரும், ஆலோசகருமான சாகித்ய ரத்னா விருது பெற்ற டாக்டர் தி. ஞானசேகரன் காலமானார் என்ற செய்தி, தெல்தோட்டை ஊடக மன்றத்திற்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
எழுத்துலகில் தனித்துவமான பண்பும் ஆழமான சிந்தனையும் கொண்ட இவர், பல்வேறு சமூக, கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை.
அனைவருடனும் அன்பாக பழகும் பண்பும், குறிப்பாக இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் எப்போதும் போற்றத்தக்கதாகும். அவரது வழிகாட்டலின் கீழ் வெளிவந்த ‘ஞானம்’ சஞ்சிகை, இலக்கிய உலகில் ஒரு முக்கிய தளமாகத் திகழ்ந்தது. இதில் குறிப்பாகக் குறிப்பிட வேண்டியவை:
-
அருள்வாக்கி அப்துல்காதிர் புலவரின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட 217ஆவது சிறப்பிதழ்.
-
292 பக்கங்களில் புலவரின் கிடைத்தற்கரிய 11 நூல்களைத் தேடி ஒன்றிணைத்து வெளியிட்டமை.
-
மறக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிம் புலவரை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இந்த முயற்சி, எதிர்கால ஆய்வுகளுக்கான ஒரு பொக்கிஷமாகும்.
இந்தச் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, 2022 ஆம் ஆண்டு தெல்தோட்டை ஊடக மன்றத்தினால் நடத்தப்பட்ட அருள்வாக்கி நினைவுப் பேருரை நிகழ்வில், டாக்டர் தி. ஞானசேகரன் அவர்களுக்கு ‘அருள்வாக்கி நேசன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதை இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.
மறைந்தவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எழுத்துலகினருக்கும் தெல்தோட்டை ஊடக மன்றம் தனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
