மின்சாரம் – எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து நமது தீவில் சூடுபிடித்து பற்றி எரிவது ‘நிலக்கரி’.
தரமற்ற நிலக்கரிக் கொள்வனவு, அதில் இடம்பெற்ற ஊழல் போன்றன பற்றியும் அதற்கான இழப்புக்களும் நட்ட ஈடுகளும் பற்றியம் விவாதிப்போர், அதனை எரிப்பதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புத்தளம் சமூகம் பற்றிக் கதைக்காமலிருப்பது கவலைக்குரியது.
தேசிய மின்சாரத் தேவையில் சுமார் 40% – 50% ஐப் பூர்த்திசெய்யும் நுரைச்சோலை, ‘லக் விஜய’ அனல்மின் நிலையம் 2007 – 2014 காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக நிறுவப்பட்டு நாட்டு மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கில் இங்கு நிலக்கரி எரிக்கப்பட்டு வருகின்றது.
அனல்மின் நிலையம் அமைந்துள்ள கல்பிட்டி தீபகற்பம், ஒரு பொன் விளையும் பூமி. மத்திய மலைநாட்டில் விளையும் ஓரிரு மரக்கறிகளைத் தவிர, ஏனைய அனைத்தும் இங்கு உற்பத்தியாகின்றன.
பெருங்கடலும் சிறுகடலும் சங்கமித்து, கரையோரம் ஒன்றுக்குரிய அனைத்து நிலத்தோற்ற உறுப்புக்களும் ஒருங்கேயமைந்த இயற்கை எழில்மிகு நெய்தல் நிலம் அது.
130 வகைகளுக்கும் மேற்பட்ட அழகிய பவளப் பாறைகளையும் சுமார் 300 பாறைவாழ் உயிரினங்களையும் வர்ண மீனினங்களையும் மட்டுமன்றி திமிங்கிலங்களையும் டொல்பின்களையும் டூடோங் (ஆவுலியா) எனப்படும் முலையூட்டிகளையும் இக்கடலில் பெருமளவில் கண்டு ரசிக்கலாம்.
கடலோரம் வளர்ந்து வனப்பூட்டும் கண்டல் தாவரங்களின் இயற்கை அழகே தனி. 20 க்கும் அதிக மணலை மீனினங்கள் (Mullet) இக்கடல் பிரதேசத்தில் உள்ளன.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்று புகைபோக்கிகளிலிருந்து வெளியேறும் புகையிலிருந்தும், இவ் வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சாம்பல் குவியல்களிலிருந்தும் வெளியேறும் நச்சுக்கள், இந்த இயற்கையை அழிவில் விளிம்புக்கு இட்டுச்சென்றுவிட்டன.
உலகின் 24% மான பாதரச மாசடைவு அனல்மின் நிலையங்களின் மூலமே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புத்தளம் பிரதேச பெண்களின் தலைமுடி மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவு திடுக்கிட வைக்கின்றது.
97 வீதமான பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும் 77 வீதமானவர்களுக்கு மிக அபாயகரமான அளவிலும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது
கர்ப்பப்பையில் உள்ள சிசுவையும் பாதிக்க கூடிய இந்த பாதரசம், மூளை மற்றும் மனித நுண்ணறிவைப் பாதிக்கக் கூடியதுடன் சிறுநீரகம், இதயம் சம்பந்தமான நோய்கள், மனநோய், பார்வை இழத்தல் போன்ற வேறு பல நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது.
1970. 03. 20 இல் பிரதமர் டட்லி சேனநாயக்க அவர்களால் திறந்துவைக்கப்பட்ட புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலை மூலம் ஏற்பட்ட சூழல் மாசடைவை புத்தளம் அனுபவித்து வந்த நிலையில் 2011. 03. 22இல் இப்பிரதேச மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி ஆரம்பிக்கப்பட்ட அனல் மின்நிலையம் மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக்கியது.
இத்தருணத்தில் 1952. 02. 04 அன்றே, புத்தளம் காசநோய் வைத்தியசாலையை (TB Hospital) H.S. இஸ்மாயில் அவர்கள் திறந்து வைத்தமையையும் எண்ணிப்பார்க்கவேண்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற, நிலக்கரி மின்சாரம் (coal power) மற்றும் உயிரி எரிபொருள் மானியங்களை குறைக்க வேண்டும் என முதல் முறையாக அறிவித்த, ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) இலங்கையும் கலந்துகொண்டது.
COP26 இன் சில முடிவுகள்:
🚨 2030 க்குள் மீதேன் உமிழ்வை 30% குறைத்தல்.
🚨 2030 க்குள் காடழிப்பை நிறுத்துதல்.
🚨 புதிய நிலக்கரி மின் நிலையங்களுக்கு அனுமதி வழங்காதிருத்தல்.
🎯 நிலக்கரி மின் நிலையத்தை கட்டம் கட்டமாக இழுத்து மூடுதல்.
Z.A. Zanhir
