இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகளைக் கொண்ட “தர்மசக்தி அமைப்பு”, தற்போது நிலவி வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை நிறுத்துமாறு கோரி, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இன்று (06) காலை மகஜர் ஒன்றை கையளித்தது.
இதன் பிரதிகள் அமெரிக்க மற்றும் ஈரான் தூதரகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்ச் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த கடிதத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தவறியுள்ளமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
-
ஆபிரகாமிய வழிவந்த யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் அடிப்படை சாரம் அமைதி என்ற போதிலும், இன்று அந்தச் சமூகங்கள் பரஸ்பரம் அழிவில் ஈடுபட்டு வருவது வருத்தத்திற்குரியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
மத்திய கிழக்கில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரம் இந்தப் போரினால் ஆபத்தில் உள்ளதாகவும், இது இந்நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு தாங்க முடியாத சுமையாக மாறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இறையாண்மை கொண்ட நாடுகளின் தலைவர்களை நியமிப்பதில் அல்லது நீக்குவதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற வல்லரசுகள் தலையிடுவது, மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என தர்மசக்தி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
-
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நடவடிக்கை எடுத்தல்.
-
போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்கள், குறிப்பாகக் குழந்தைகளின் குரலுக்குச் செவிசாய்த்தல்.
-
வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி, நாடுகள் தங்களின் தலைமையை தாங்களே தீர்மானிப்பதற்கான இறையாண்மை உரிமையைப் பாதுகாத்தல்.
ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மையானது இத்தகைய தீர்மானமிக்க தருணங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, அமைதிக்காக நேர்மையாகவும் விரைவாகவும் தலையிடுமாறு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

