ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கொள்ளுப்பிட்டி, பெத்ரிஸ் வீதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த வீட்டினுள் உள்ள ஒரு படுக்கையறையில் அவரது சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொழும்பு நீதி மருத்துவ அதிகாரியும் கோட்டை நீதிபதி பாசன் அமரசேகரவும் விசாரணை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த மற்றும் கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா ஆகியோரின் மேற்பார்வையில், இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கபில சந்திரசேன நீண்டகாலமாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்தார்.
2013 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஆறு ஏர்பஸ் ஏ-330 மற்றும் எட்டு ஏ-350 ரக விமானங்களை வாங்கியது தொடர்பாக, அவரும் அவரது மனைவியும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தை விசாரித்து, 2020-ல் தம்பதியினரைக் கைது செய்து, பின்னர் அவர்களைப் பிணையில் விடுவித்தது.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாடுக்களை விசாரணைக்கும் ஆணைக்குழுவும் ஒரு விசாரணையைத் தொடங்கியது.
அதன் விளைவாக இந்த ஆண்டு மார்ச் 12 அன்று கபில சந்திரசேன மீண்டும் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, கூறப்படும் இலஞ்சப் பணத்திலிருந்து அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு ரூ. 20 மில்லியனையும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ரூ. 60 மில்லியனையும் விநியோகித்ததை அவர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இருப்பினும், அந்த வாக்குமூலம் வற்புறுத்தலின் பேரில் பெறப்பட்டதாக அவரது சட்டத்தரணி வாதிட்டார்.
வழக்கு விசாரணைக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரியங்கர ஜெயரத்ன இருவரும் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மே 12 அன்று முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
சந்திரசேனா 54 நாட்கள் நீதிமன்றக் காவலுக்குப் பின்னர், மே 5 அன்று 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று பிணைதாரர்கள் உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு நபர்கள் மோசடியாக உறவினர்களாகக் காட்டப்பட்டதை பொலிஸார் பின்னர் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மே 7 அன்று, பிணை நிபந்தனைகளை மீறியது மற்றும் நீதிமன்ற நம்பிக்கையை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, சந்திரசேனாவை மீண்டும் கைது செய்ய கொழும்பு பிரதான நீதிபதி நேற்று புதிய பிடியாணை பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
