அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளர் (Controller), குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடக அறிக்கைகளின்படி, ஒருபோதும் நிறுவப்படாத “பயனர் மேலாண்மை தொகுதி” (User Management Module) மென்பொருளுக்காக மேற்கொள்ளப்பட்ட
ரூ. 9,831,250 பணப்பரிமாற்றம் குறித்த விசாரணைகளை அடுத்தே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மென்பொருள் அமைப்பை வழங்காமல், அரசாங்க நிதி, மோசடியாகப் பெறப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளைத் தொடரும் அதேவேளையில், சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
