-தில்சான் முஹம்மத் (Fb)
புத்தளம் தள வைத்தியசாலை பல தசாப்த காலமாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறம்தள்ளப்பட்டமைக்கு அரசியல் மட்டுமல்ல, அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் இனவாத போக்கும் ஒரு முக்கிய காரணமாகும்.
புத்தளம் தள வைத்தியசாலை வடமேல் மாகாணத்தின் ஆளுகையின் கீழ் இருந்த போது, பயனாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் (Catchment population) இந்த மாகாணத்தின் மிகப்பெரும் வைத்தியசாலையாக அடையாளப்படுத்தப்பட்ட போதும் , மாகாணத்திற்கு கிடைக்கும் நிதியில் ஒரு சொச்சம் மாத்திரமே புத்தளத்திற்கு பங்கீடு செய்யப்பட்ட பல தசாப்த கால கசப்பான வரலாறு இருந்தது.
இதை உரிய முறையில் அபிவிருத்தி செய்வதற்கு மாகாணத்தில் இருந்து மத்திய அரசின் ஆளுகையின் கீழ் இந்த வைத்தியசாலையை இடமாற்றுவதே ஒரேயொரு தீர்வு என்று கண்டறியப்பட்டிந்தது, எனினும் மாகாணத்தில் இருந்து வைத்தியசாலையை விடுவிப்பதற்கு கடந்த 20 வருடங்களாக செய்யப்பட்ட அத்தனை முயற்சிகளுக்கும் வடமேல் மாகாண சபை எதிர்ப்பை காட்டிவந்தது.
அபிவிருத்தியும் செய்கிறார்கள் இல்லை, மத்திய அரசிடம் ஒப்படைத்து செய்யவும் விடுகிறார்கள் இல்லை என்றவாறு புத்தளம் வைத்தியசாலை பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பாக்கின் நிலையை போல விழிபிதுங்கி நின்றது.
வைத்தியசாலையில் பல வருடங்களாக தொடரும் கட்டாக்காலி நாய்களின் பிரச்சினை, வாடுகளுக்கான maintenance , சுற்றுமதில் அமைத்தல், பழைய கட்டிடங்களில் காணப்படும் repairs போன்ற எத்தனையோ பிரச்சினைகள் காணப்பட்டாலும், வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதன் மூலமாக மாத்திரமே நீண்ட கால அடிப்படையில் நிரந்தர தீர்வாக உரிய சுகாதார சேவைகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கென பாராளுமன்ற உறுப்பினர் பைசல் தலைமையில், மாநகர மேயர் ரின்சாத் மற்றும் அதன் உறுப்பினர்கள், வைத்தியர்கள், துறைசார் நிபுணர்கள் என Task Force ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த Task Force இன் முதன்மை இலக்காக (Primary objective): “வைத்தியசாலையை வடமேல் மாகாணத்தில் இருந்து விடுவித்து, சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதும், புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட பொதுவைத்தியசாலையாக தரமுயர்த்தலும் ” என்று தீர்மானிக்கப்பட்டது.
இது ஒன்றும் சாதாரண இலக்கு இல்லை என்பதை இதை ஆரம்பித்து சில மாதங்களிலேயே எமக்கு தெரிய ஆரம்பித்தது. கடந்த கால கபினட் அமைச்சர்களால் கூட ஏன் இந்த இலக்கை அடையமுடியாமல் போனது என்பதை ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டும் போது புரிந்துகொண்டோம்.
இனவாத புறக்கணிப்புக்கள், குழிபறிப்புக்கள், திட்டமிடப்பட்ட காலதாமதங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமை அல்லது ஒழித்துவைத்தல், அதிகாரிகளின் போலி வாக்குறுதிகள், ஏனைய வைத்தியசாலைகளின் எதிர்ப்புக்கள் என ஒவ்வொன்றையும் மிகக்கவனமாகவும், இரகசியமாகவும் கடந்தோம். ஈற்றில் அல்லாஹ்வின் உதவியோடு எமது இலக்கை அடைந்தோம்.
ஆனாலும் புத்தளம் மண்ணுக்கு கிடைத்த இந்த வரலாற்று வெற்றியை இன்று சிலர் வெறும் “ஆவணங்கள்” என சமூக ஊடகங்களில் எள்ளி நகையாடுவதை பார்க்கையில் இதை எழுதமுடியாமலும் இருக்கமுடியவில்லை.
