இலங்கையிலுள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில், ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் இமாம் கொமேனியின் 37ஆவது நினைவுதின மாநாடு நேற்று (04) கொழும்பு, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் “தரங்கனி” திரையரங்கில் நடைபெற்றது.
ஈரான் தூதரகத்தின் கலாசார ஆலோசகர் அலி கெப்ரியாய் சாதே (Ali Kebriaei Zadeh) வரவேற்புரையினை நிகழ்த்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலி ரெஸா டெல்கோஷ் (Dr. Ali Reza Delkhosh) அவர்கள் “இமாம் அலியின் (அலை) நீதி மற்றும் இமாம் கொமேனியின் (ரஹ்) சிந்தனையில் ஓர் சிறந்த அரசாங்கத்தின் பண்புகள்” என்ற தலைப்பில் மாநாட்டில் உரையற்றினார்.
அவர் தனது உரையில்,
“1979ஆம் ஆண்டின் ஈரானிய இஸ்லாமியப் புரட்சியானது ஒரு சாதாரண அரசியல் மாற்றமோ அல்லது வெறும் ஆட்சி மாற்றமோ அல்ல. மாறாக, அது சர்வதேச அரங்கில் ‘ஆதிக்கக் கோட்பாடு’ மற்றும் ‘ஆதிக்கத்திற்குப் பணியும் தன்மை’ ஆகிய இரண்டையும் முற்றாக நிராகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அடிப்படை மாற்றமாகும். ஈரானிய தேசம் யாருக்கும் அநீதி இழைக்காது, அதேவேளை எந்தவொரு வல்லரசின் ஒடுக்குமுறைக்கோ அல்லது அராஜகத்திற்கோ பணியாது என்பதை இப்புரட்சி உலகிற்கு உரக்கப் பிரகடனப்படுத்தியது.”
தொடர்ந்து பேசிய தூதுவர், “இன்று, நமது பிராந்தியத்திலும் உலகளாவிய ரீதியிலும் முன்னெப்போதையும் விட ஆதிக்க சக்திகளின் அழிவுகரமான மற்றும் இரக்கமற்ற விளைவுகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது.
தற்போது அமெரிக்காவும், சீயோனிச ஆட்சியும் (Zionist regime) அவர்களின் சில கூட்டாளிகளும் இணைந்து இப்பிராந்தியத்தில் எல்லையற்ற அத்துமீறல்கள், அழிவுகள், படுகொலைகள் மற்றும் இரத்தக் களரிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்று ஈரான், காசா, லெபனான் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நடப்பவை அனைத்தும், சர்வதேச சட்டங்கள், மனித உரிமைப் பிரகடனங்கள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கைகளை காலில் மிதித்து, கொடூரமான இனப்படுகொலை, சிசுக்கொலை மற்றும் அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அந்த வல்லரசுகளின் தார்மீக வீழ்ச்சிக்கு தெளிவான சான்றாகும்.
இந்த ஒடுக்குமுறை முன்னணியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பிராந்திய அமைதியை மட்டுமன்றி உலகப் பாதுகாப்பையே ஆபத்துக்குள்ளாக்கியுள்ளன. இத்தகைய சூழ்ச்சிகளை எதிர்ப்பதிலும், பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்பதிலும், ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதிலும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு எப்போதும் முன்னணியில் நிற்பதில் பெருமிதம் கொள்கிறது.”
இந்த மாநாட்டில் பிரேசில், சவூதி அரேபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கான முன்னாள் தூதுவரும், மாலைதீவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான ஏ. எம். ஜே. சாதிக் (A. M. J. Sadeq) மற்றும் ஹாஷிமி அறக்கட்டளையின் தலைவரும் இஸ்லாமிய அறிஞருமான அஷ்-ஷைக் லஃபிர் மதனி (Ash Sheik Lafir Madani) ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், தூதரக அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டதுடன், இமாம் கொமேனியின் வாழ்வு மற்றும் சிந்தனைகளை விபரிக்கும் விசேட ஆவணப்படக் காட்சியும் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-ருஸைக் பாரூக்.
