ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
