கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் (A/L) கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் பிரதான விபரங்கள் வருமாறு.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி (9A) பெற்ற சாதனையாளர்களின் எண்ணிக்கை 11,790 ஆகும்.
கடந்த வருட பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய இரு முக்கிய பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்களின் சதவீத வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அடுத்த 2026 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இவ்வருடத்தின் (2026) டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
