தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இந்த கோர விபத்தின் போது, தங்களின் சொந்த உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் எரியும் கட்டிடத்திற்குள் புகுந்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர் 5 முஸ்லிம் இளைஞர்கள்.
மால்வியா நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ சதீஷ் உபாத்யாய், மீட்புப் பணியில் ஈடுபட்ட அந்த 5 இளைஞர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவர்களின் வீரத்தைப் பாராட்டியுள்ளார்.
“இந்த மாவீரர்களுக்கு எனது சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த இளைஞர்களை அஃப்ஸல், முகமது ஷாருக், முகமது அனீஷ், முகமது ஆமிர் மற்றும் முகமது வசீம் என அடையாளம் காட்டியுள்ளார்.
டெல்லி பொலிஸாருடன் இணைந்து, இந்த இளைஞர்கள் எரியும் கட்டிடத்திற்குள் பலமுறை சென்று, உள்ளே சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக வெளியேற்ற உதவியதாக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் உடனடியாக மீட்புப் பணியில் குதித்தனர். ஹோட்டலுக்கு எதிரே மெத்தைக்கடை நடத்தி வரும் 61 வயதான ரியாசுதீன் என்பவர் செய்த காரியம் பலரது நெஞ்சைத் தொட்டுள்ளது.
கட்டிடத்தில் தீப்பிடித்ததும், மாடியிலிருந்து குதிக்க முயன்றவர்களைக் காப்பாற்ற, தனது கடையிலிருந்த அனைத்து மெத்தைகளையும் இழுத்து வந்து கீழே இருந்த குறுகிய பாதையில் விரித்தார்.
இதனால் மாடியிலிருந்து குதித்த பலருக்குப் பலத்த காயம் ஏற்படாமல் உயிர் தப்பினர். இந்த மீட்பு நடவடிக்கையில் ரியாசுதீனுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், “பணம் போனால் என்ன, குறைந்தது 10 பேரின் உயிரையாவது என்னால் காப்பாற்ற முடிந்ததே, அதுவே எனக்கு மனநிறைவு” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரியான வசீம் ரசா, கட்டிடத்தின் அடித்தளம் (Basement) முதல் மூன்றாவது மாடி வரை புகைக்கு நடுவே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். “நான் கட்டிடத்திற்குள் மூச்சுத் திணறியபடி இருந்த குறைந்தது 10 பேருக்கு CPR (இதய நுரையீரல் புத்துயிரூட்டல்) முதலுதவி சிகிச்சை அளித்துக் காப்பாற்றினேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தீயணைப்புப் பயிற்சிப் பயிற்சியாளரான முகமது சோயிப் (35) கூறுகையில், மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பே நிலைமை மோசமடைந்ததால், பயத்தில் சுமார் 9 பேர் மாடியிலிருந்து கீழே குதித்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் மொத்தம் 47 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 21 பேரில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 9 பேர் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 பேர் என 11 வெளிநாட்டினரும் அடங்குவர். எஞ்சியவர்கள் இந்தியர்கள் ஆவர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஹோட்டல் தீயணைப்புத் துறையின் முறையான அனுமதி (NOC) இன்றி இயங்கியது தெரியவந்துள்ளது. மேலும், 6 அறைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக 20-க்கும் மேற்பட்ட அறைகளை அவர்கள் நடத்தியுள்ளனர். கட்டிடத்திற்கு ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருந்ததால், மக்கள் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
துயரமான இந்த விபத்தில், சாதி மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் செயல்பட்டு பல உயிர்களைக் காத்த இந்த உள்ளூர் முஸ்லிம் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
