காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த ‘சிவப்பு’ மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (12) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை, நாளை (13) சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரும் வரை இந்த கடற்பரப்புகளுக்குள்கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீட்டர் (kmph) வேகத்தில் வீசும் பலத்த காற்றினால் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் உள்ளது.
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
