இலங்கையில் டெங்கு நோய் அதி தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,016 ஆகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 57 ஆகவும் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மழை குறைந்தால் டெங்கு பரவல் குறைய வாய்ப்புள்ள போதிலும், வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு மத்தியிலும் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின்க கீழ் பத்தரமுல்ல, பெலவத்த மற்றும் கலல்கொட ஆகிய பகுதிகளில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இராணுவம், விமானப்படை, காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் வீடுகள் மற்றும் வளாகங்கள் சோதனையிடப்பட்டன.
பெலவத்த பகுதியில் இடம்பெற்ற சோதனையின் போது வீடு ஒன்றிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதால் அங்கு கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 3 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குவதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அதிவேகமாக பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காவல்துறை இணைந்து பரந்த அளவிலான விசேட ஒழிப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
