ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாக்களைத் தனிப்பட்ட பயன்பாட்டிலிருந்து நீக்கி, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் குறிப்பிட்டார். குறித்த கட்டிடங்கள் பயன்படுத்தப்படாவிட்டாலும், அவற்றைப் பராமரித்துப் பாதுகாக்கவும், வணிக ரீதியான அல்லது பொதுச் சேவைகளுக்காகப் பயன்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, ஜனாதிபதி மாளிகைகள் உள்ளிட்ட உத்தியோகபூர்வ கட்டிடங்களின் எதிர்காலப் பயன்பாடு தொடர்பான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், சில உத்தியோகபூர்வ பங்களாக்கள் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் நீதிச் சேவைகளை மேலும் திறம்பட நடத்த முடிந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்கள் உத்தியோகபூர்வ பங்களாக்களில் வசிக்கின்றனர் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்த பிரதமர், தற்போதைய அமைச்சரவையின் எந்தவொரு அமைச்சரும் அத்தகைய பங்களாக்களில் வசிக்கவில்லை என்றும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல எம்.பி.க்கள் வீடமைப்பு வளாகத்தில் மட்டுமே தங்கியுள்ளனர் என்றும் கூறினார்.
