முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

Date:

-லத்தீப் பாரூக்

21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத அம்சங்கள் குறித்து தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளை, இலங்கையின் 2.1 மில்லியன் சனத் தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர்.

உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் துளிர் விட்டுள்ளது.  ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு குற்றவாளிகளுக்கும், இந்த சிறுபான்மை சமூகத்துக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதும் இந்த விடயத்தில் சமூகத்தின் அப்பாவித்தனமும், உரிய முறையில் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு முஸ்லிம் சமூகம் காத்திருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்குப் பின்னர், முஸ்லீம் சமூகம் இந்த படுகொலையுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஒரே குரலில் அறிவித்ததுடன், முஸ்லீம் பெயர்களைக் கொண்ட குற்றவாளிகளை, முஸ்லிம் மயான பூமிகளில் அடக்கம் செய்வதற்கான அடிப்படை மத உரிமைகளையும் வழங்க மறுத்தது.

இந்த ஈனச் செயலைப் புரிந்தவர்கள் அலுத்கமவில் சில காலங்களுக்கு முன் நடந்த முஸ்லீம் சமூகத்தின் மீதான இனவெறி தாக்குதல்களால் விரக்தியடைந்தவர்களாக இருந்தனர். இருப்பினும் எந்த வகையிலும் அவர்களது விரக்தி நியாயப்படுத்தப்படவில்லை.

உண்மையில் விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து, கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும், சமூகங்களை ஒன்றிணைக்கவும், சகல மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னோக்கிச் செல்லவும் இந்த நாட்டுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. சமூகங்களை ஒன்றிணைக்கவும், நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றவும் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட, தகுதியான தலைவரை உருவாக்க, பெரும்பான்மை சமூகம் தவறிவிட்டது!  மாறாக, அன்றைய ஆட்சியாளர்கள் வன்முறையுடன் கூடிய முஸ்லீம் எதிர்ப்பு போக்குடைய, இஸ்ரேல் மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, இந்த தேசத்தின் இரண்டாவது பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களை துன்புறுத்தத் தொடங்கினர்.

உண்மையில் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் சிங்கள மற்றும் தமிழர்களுடன் பல நூற்றாண்டுகள் பழமையான, அமைதியான உறவுகளுக்கும் மற்றும் தேசபக்தி தொடர்புகளுக்கும் பெயர் பெற்றவர்கள். உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் தொடக்கத்திலிருந்தே அப்போதைய அரசாங்கமும், ஊடகங்களின் சில பிரிவுகளும் விவாதிக்க மறுத்த பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருந்தன.

(1) இஸ்லாத்தில் தற்கொலை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்    பதிலளிக்கப்படாத ஒரு கேள்வி என்னவென்றால், சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது பிரதான சூத்திரதாரியால் பலிக்கடாவாகப் பயன்படுத்தப்பட்டார்களா?

(2) கிறிஸ்தவ மக்களுக்கும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்துக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு சமூகத்தவர்களும் நல்லிணக்கத்துடனேயே வாழ்ந்தனர். எனவே முஸ்லிம்கள் ஏன் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும், அதுவும் தேவாலயங்களில்???

(3)-இந்த படுகொலைகளின் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் என்றும், கர்தினால் மல்கம் ரன்ஜித் பலமுறை விவரித்துள்ளார். படுகொலையின் பின்னணியில் உள்ள சர்வதேச சக்திகளைக் கண்டுபிடிக்குமாறு அவர் விடுத்த அழைப்பு இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது

(4)-சந்தேகத்திற்கிடமான குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமுக்கும் அவரது சகாக்களுக்கும் கிரமமான ஒரு ஊதியம் வழங்கப்பட்டதாகவும், பலிக்கடாக்களாகப் பயன்படுத்தவே அவர்கள் வளர்க்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.  இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள் இந்த செய்திகளைப் பின் தொடரத் தவறிவிட்டன.

இந்த குண்டுவெடிப்பை நடத்திய நபர்கள் ஒப்பந்த அடிப்டையிலான கொலையாளிகள் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சூத்திரதாரிகள் குறித்து பல முக்கிய கேள்விகளையும் எழுப்பினார்.

அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன, மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் சர்வதேச சக்திகள் மீது குற்றம் சுமத்த மறுத்தனர். மாறாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களும் அது சார்ந்த குழுக்களும் இந்த நாட்டை ஆக்கிரமிக்க அவர்கள் வழி விட்டனர்.

கர்தினால் குற்றம் சாட்டிய சக்திவாய்ந்த நாட்டிலிருந்து ரணில் விக்கிரமசிங்க, புலனாய்வாளர்களை வரவழைத்தார். எந்த மஜிஸ்திரேட் ஒப்புதலும் இல்லாமல் ஈஸ்டர் விசாரணையில் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டார்.

அன்று இந்த சோகத்தால் பயனடைந்த உண்மையான சூத்திரதாரிகளை விசாரிக்கத் தவறிய அவர், இன்று அரசாங்கத்திற்கு அதையே மீண்டும் நினைவூட்டுகின்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு, இது முஸ்லீம் சமூகத்தை நசுக்குவதற்காக மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் அரங்கேற்றப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது புலனாகியது. “முதலில் தமிழர்களையும் பின்னர் முஸ்லிம் சமூகத்தையும் சமாளிப்போம்” என்ற காட்டுமிராண்டித்தனமான கொள்கைக்கு இணங்க, தமிழர்களை வெற்றிகரமாக நசுக்கிய பின் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சதியே இது என்பது தெளிவாகியது.

இந்த சதித்திட்டத்தில் அரசாங்கம்,  எதிர்க்கட்சி, சமய துறவிகள், அதிகார வர்க்கம், வணிகர்கள் மற்றும் இன்னும் பலர் ஈடுபட்டதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ்தவ மக்களை தூண்டி விடலாம் என்ற  நம்பிக்கையில், இஸ்ரேல் போன்ற உலகளாவிய முஸ்லீம் எதிர்ப்பு சக்திகள் மற்றும் இந்தியாவின் ஆர். எஸ். எஸ் முன்னணியின் கீழான பாரதிய ஜனதா கட்சி அரசுடன் இணைந்து, அவர்கள் இந்த சதித்திட்டத்தைத் தயாரித்ததாகவே தெரிகின்றது.

முஸ்லிம்களை குற்றவாளிகள் ஆக்குவதன் மூலம் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவார்கள் என்று சதியாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த படுகொலையுடன் முஸ்லீம் சமூகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்பும், சரியான நேரத்தில் அவரின் தலையீடும் இந்த நாட்டில்   முஸ்லிம்களின் இரத்தம் ஆறாக ஓடுவதை தடுத்தது.

ஜனாதிபதி சிறிசேனா அவசர நிலையை அறிவித்து, முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பிற வளாகங்களில் சோதனை நடத்த துருப்புக்களை அனுப்பினார். அதே நேரத்தில் பெண்களின் புர்காவை (முகம் மூடிய ஆடை) உடனடியாக தடை செய்தார்.

பொலிஸாரினதும் பாதுகாப்பு படைகளினதும் தேடுதல் நடவடிக்கைகள் முஸ்லீம் குடும்பங்களுக்கு பயங்கரமான அனுபவமாக மாறியது. மேலும் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் எந்த விதமான தகுந்த காரணங்களும் இன்றி மோசமான முறையில் காவலில் வைக்கப்பட்டு பல வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டனர்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் மீதான தேடுதல் நடவடிக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய தேடுதல் நடவடிக்கைகளை ஒத்திருந்தன.

அதுபோலவே முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான சொத்துக்களை எரிப்பது, அப்பாவி முஸ்லிம்களைக் கொல்வது போன்ற வன்முறைத் தாக்குதல்கள், வட இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி, சிவசேனா மற்றும் பஜ்ரங்தள் தாக்குதல்களை ஒத்திருந்தன.

பல இடங்களில் முஸ்லீம் வீடுகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய பல இடங்களும் எரிக்கப்பட்டன.   நோன்பு நோற்ற நிலையில் இருந்த ஒரு முஸ்லீம் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்ட மற்றொரு முஸ்லீம் தெருவழியாக மருத்துவ மனைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.  அப்போது அவர் மரணம் அடைந்தார்.

இந்தக் கொடூரமான காரியங்களில் ஈடுபட்ட நபர்களில் பெரும்பாலானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப்   பெயர் போன ஒரு மோசமான ரவுடி, மக்களால் மேள தாளத்தோடு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஏப்ரல் 21 முதல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை செயற்பாடுகள், பெரும்பான்மை சமூகத்தின் பல பிரிவுகளால் திட்டமிட்ட விதத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது.  காவலில் வைக்கப்பட்டிருந்த அப்பாவி முஸ்லிம்களுக்காக சிங்கள வழக்கறிஞர்கள் ஆஜராக மறுத்தனர்.

முஸ்லிம் பெண்கள் தங்கள் முக்காடுகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திய மருத்துவர்கள், தலையை மூடி வருகை தந்த முஸ்லிம் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்தனர்.

முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன.  ஒரு பிரதேச சபை தலைவர் தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில், முஸ்லிம்கள் வாராந்த சந்தையில் வர்த்தகம் செய்வதைத் தடுத்தார். விகாரைகள் பௌத்த மக்களை முஸ்லிம்களுடன் பழக வேண்டாம் என்று அறிவுறுத்தத் தொடங்கின. இந்த புறக்கணிப்பு முஸ்லிம்களை ஒரு மூலைக்குள் முடக்கியது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மிகவும் கொடூரமாக இருந்தன.

இதனால் புற்றுநோய் மருத்துவமனை உட்பட மருத்துவ மனைகளின் நோயாளிகள், மற்றும் அவர்களின் அருகில் தங்கி இருப்போரில் தேவைப்படும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு என, தினசரி சுமார் 3000 பேருக்கு காலை உணவு, மதிய உணவு, மற்றும் இரவு உணவு என்பனவற்றை இலவசமாக வழங்கி வந்த ஒரு முஸ்லீம் நிறுவனம், அவர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்ட பாதகமான கருத்துக்கள் காரணமாக தனது மனிதாபிமான சேவைளை இரத்துச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், முஸ்லிம்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு மக்கள் அடிக்கடி செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முஸ்லிம்கள் வழங்கும் உணவை உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சிங்கள பௌத்தர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் ஒரு முன்னணி துறவி அழைப்பு விடுத்தார்.

ஆனால் அதேவேளை “துணிச்சலான சக முஸ்லீம் அதிகாரிகளால் தான் நாம் இன்று உயிருடன் இருக்கின்றோம்” அதே முஸ்லீம் சமூகத்தின் தியாகங்களால் தான் இந்தத் தீவு இன்று ஒரே நாடாகவும் உள்ளது என்று, அப்போதைய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறி இருந்தார்.

அதை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொட்டித் தீர்க்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டப்பட்ட வெறுப்பின் உச்ச மட்டத்தை அன்று கண்கூடாக காண முடிந்தது

விடுதலைப் புலிகளின் நோக்கத்தை ஆதரிக்காததால் வடக்கு மற்றும் கிழக்கில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்களை புலிகள் தாக்கி விரட்டியடித்ததாகவும் அவர் நினைவூட்டினார். முஸ்லிம்களுக்கு நியாயமற்ற முறையில் தீங்கு விளைவிக்கும் சிங்களவர்கள் துரோகிகள். முஸ்லிம்களைப் பாதுகாப்பது நமது கடமை என்றும் அவர் மேலும் கூறினார்..

அன்றைய காலகட்டத்தில் உலகளாவிய முஸ்லீம் எதிர்ப்பு சக்திகளின் மோசமான விளையாட்டு மைதானமாக இலங்கை வேகமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கை மீது வஷேடமான விருப்பம் கொண்ட முஸ்லீம் உலகம் முஸ்லிம்கள் மீதான இனவெறி தாக்குதல்களை மிகுந்த திகைப்புடன் அவதானித்து வந்தது.

இதற்கிடையில், உலப்பனேஎன்ற இடத்தில் ஒரு வைபவத்தில் உரையாற்றிய ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் ஒப்பந்தக் கொலையாளிகள் என்றும், “யாரோ ஒருவர் இந்த கொலையைச் செய்ய ஸஹ்ரானின் குழுவை அமர்த்தியுள்ளனர்” என்றும் கூறினார்.

தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினராக இருந்த ஹக்கீம் “உள்ளூர் ஊடகங்கள் முஸ்லீம் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட கத்திகள் மற்றும் வாள்களைக் காண்பிப்பதன் மூலம் மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.  சில முஸ்லிம் வீடுகளில் இப்போது பாண் வெட்டுவதற்கு கூட ஒரு கத்தி இல்லை” என்றார்.

இந்த கசப்பான அனுபவங்களை சகித்துக் கொண்டு எந்த விதமான உதவியும் தமக்கென ஒரு குரலும் அற்ற நிலையில் வாழ்ந்த இந்த நாட்டு முஸ்லிம்கள் உண்மை நிலைநாட்டப்படும் என்ற புதிய நம்பிக்கையோடு நடந்து வரும் விசாரணைகளை மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகம் அதன் மீது சாட்டப்பட்ட எல்லா  தவறான குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியான நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவியாக திருமதி அனீஸ்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ் ஜனாதிபதி...

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21)...