பாடநூல்கள் சில காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகத் திணைக்கள விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த பாடநூல் தொகுதி போக்குவரத்திற்காகக் கையளிக்கப்பட்ட பின்னர், முதலாவது சந்தேகநபரால் அலவ்வ பகுதியிலுள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் அத்தொகுதியை நாரம்மல பகுதியிலுள்ள மையமொன்றிற்கு விற்பனை செய்துள்ளார்.
அதன்பின்னர், அங்கிருந்து வத்தளை பகுதிக்கு அந்தப் பாடநூல் தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 24ஆம் திகதி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக இந்தப் பாடநூல் தொகுதி கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போக்குவரத்திற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது, 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான முதலாம் தரத்தின் மூன்றாம் தவணைக்குரிய தமிழ்மொழிச் செயற்பாடு மற்றும் பாடநூல் தொகுதியாகும்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
