மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

Date:

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி ஹஸ்மா அலி, தமது 100வது வயதில், கோலாலம்பூரில் உள்ள இதய சிகிச்சை நிலையத்தில் திங்கட்கிழமையன்று (28) காலமானார்.

அவரது மறைவை அவரது மகனான மொக்சானி மகாதீர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தினார்.

1926 ஜூலை 12ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள கிள்ளான் பகுதியில் பிறந்த சித்தி ஹஸ்மா, மலேசியாவின் தொடக்கக்கால மலாய்ப் பெண் மருத்துவர்களில் ஒருவராவார். அவர், மருத்துவம், பொதுச் சுகாதாரம், சமூகப் பணிகளில் நீண்டகாலம் சேவையாற்றினார்.

சிங்கப்பூரில் இருந்த ஏழாவது எட்வர்ட் அரசர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற அவர், 1955ல் பட்டம் பெற்றார்.

மலேசிய சுகாதார அமைச்சில் இணைந்த பிறகு, கெடா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ அதிகாரியாக அவர் பணியாற்றினார். தாய்-சேய் நலன் மற்றும் பொதுச் சுகாதாரத்திலேயே அவரது கவனம் அதிகம் இருந்தது.

சித்தி ஹஸ்மாவின் குடும்பத்தினருக்கு மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமும் அரசியார் ராஜா ஸரித் சோஃபியாவும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்தவரின் குடும்பத்தினர் தங்கள் அன்பிற்குரியவரின் இழப்பை எதிர்கொள்ளக்கூடிய வலிமையையும் மன உறுதியையும், பொறுமையையும் பெற இறைவனைப் பிரார்த்தனை செய்வதாக சுல்தான் இப்ராகிமின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டாக்டர் ஹஸ்மாவுக்கு திங்கட்கிழமை மாலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்று, அவரது நல்லுடல் புத்ராஜெயாவில் உள்ள தேசிய நினைவகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சித்தி ஹம்சாவின் இறுதிச் சடங்கில் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கலந்துகொண்டார்.

“மறைந்த டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு நாட்டின் மூத்த அரசியல் தலைவருக்குரிய அரசு மரியாதை செலுத்துவதற்கும், இறுதிச்சடங்கு ஏற்பாடுகளுக்கு உதவி செய்வதற்கும் தலைமைச் செயலாளருக்கும் பாதுகாப்புப் படைத் தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்,” என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் திங்கட்கிழமை (28) தெரிவித்தார்.

“இந்தப் பேரிழப்பை எதிர்கொண்டுள்ள டாக்டர் மகாதீர் முகமதிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, நாட்டின் முன்னேற்றத்திற்காக டாக்டர் சித்தி ஹஸ்மா ஆற்றிய பங்கும் சேவைகளும் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

டாக்டர் சித்தி ஹஸ்மா, 1956ல் டாக்டர் மகாதீரை முகமதை மணந்தார்.

அந்தத் தம்பதியருக்கு சமூகச் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான மரினா மகாதீர், கெடா மாநில முன்னாள் முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீர் உட்பட ஏழு பிள்ளைகள் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சைவநெறிக்கூடம் விரைந்த வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான திரு....

போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘குறைபாட்டுப் புள்ளி’ முறை ஒக்டோபரில் ஆரம்பம்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்தும் ஆறு...

ஆசிய தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்று கம்பஹா சிறுவன் ஃபஹத் நவாஸ் சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக...

அனோஜன் விவகாரம்; பொதுமன்னிப்பு வழங்க தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு...