இலங்கை தமிழர்– முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்துவதில் முழுமையான அக்கறை கொண்டுள்ளேன் – மு.தமிமுன் அன்சாரி
இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் தாம் முழுமையான அக்கறை கொண்டுள்ளதாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், சமூகத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தாம் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் தனது குடும்பத்தின் மூதாதையர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நெருக்கமான தொடர்புகள் இருந்து வந்துள்ளதாகவும், அந்த உறவுகளின் அடிப்படையில் இலங்கை மக்களுடன் தாமும் நல்லுறவைப் பேணி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு சமூகங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு ஒற்றுமையும் புரிந்துணர்வும் அவசியமானவை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலக் கசப்பான சம்பவங்கள் மற்றும் முரண்பாடுகளைக் கடந்து எதிர்கால நலனுக்காக ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழர் தலைவராக இருந்த தந்தை செல்வா மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் ஆகியோர் இணைந்து பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்த அவர், பிராந்திய சூழலுக்கு ஏற்ப இத்தகைய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.