எழுச்சிபெறும் திஹாரிய சமூகம்; 30 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை உறுதி
125 ஆவது ஆண்டில் தடம் பதிக்கவிருக்கும் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நீண்டகாலத் தேவையாகக் காணப்படும் பாடசாலைப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, வெறும் 30 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகளை வழங்குவதற்கு நலன்விரும்பிகள் உறுதியளித்துள்ளனர்.
பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அல்ஹாஜ் AJM Furkhan அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அல்ஹாஜ் HMM Shahny உள்ளிட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கச் செயலாளர் Azmy Sharaf உள்ளிட்ட உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தனவந்தர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஒவ்வொரு வகுப்புத் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
அவற்றில், பாடசாலையின் நீண்டகாலத் தேவையாக இருந்து வரும் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதே மிக முக்கியமான திட்டமாக முன்மொழியப்பட்டது.
இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலந்துகொண்ட தனவந்தர்களும் நலன்விரும்பிகளும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பழைய மாணவிகள் சங்கம், ஆசிரியர்கள், முன்னாள் அதிபர்கள், ஒவ்வொரு வகுப்புத் தொகுதியின் பழைய மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது பங்களிப்பை அறிவித்தனர். அதேவேளை, தங்களது மறைந்த குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் சிலர் நன்கொடைகளை வழங்க முன்வந்தனர்.
குறிப்பாக, சில தனவந்தர்கள் 10 இலட்சம், 5 இலட்சம், 3 இலட்சம் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் எனப் பெருந்தொகைகளை வழங்குவதாக அறிவித்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டு வெறும் 30 நிமிடங்களுக்குள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டமை இந்நிகழ்வின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து மேலும் பலர் தங்களது நிதிப் பங்களிப்புகளை அறிவித்ததையடுத்து, நிகழ்வு நிறைவடையும் போது பாடசாலைப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக மொத்தம் ஒரு கோடியே இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (ரூ. 1,02,50,000) வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது.
இது வெறுமனே ஒரு நிதி சேகரிப்பு நிகழ்வு மட்டுமல்ல; தாம் கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்களும், தனவந்தர்களும், நலன்விரும்பிகளும் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நிகழ்வின் இறுதியில், பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான உபகுழுவும் தெரிவு செய்யப்பட்டது.
இந்த மகத்தான திட்டத்திற்காக முன்வந்து நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்த அனைத்து நலன்விரும்பிகளும் பொருளாதாரத்தில் மேலும் வளர்ச்சியடையவும், நீண்ட ஆயுளுடனும் நோயற்ற வாழ்வுடனும் வாழவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இந்த முன்மாதிரியான செயலானது இலங்கை வாழ் அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும்.
கல்வியின் மூலமே நாட்டு மக்களுடைய சகல சமூகங்களுடைய எழுச்சி தங்கி இருக்கிறது. எனவே இந்த முன்மாதிரியை கொண்டு தத்தமது பிரதேசங்களிலே கல்வி முன்னேற்றத்திற்காக தனவந்தர்கள் முன்வரவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வு எமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.