இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி கொழும்பு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள், இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கமைய, இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 291ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, 2024ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் நான்கு வருட பாரிய கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளதுடன், முன்னர் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் உறுதி செய்துள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.