இலங்கையில் HIV தொற்றாளர்கள் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் சுகாதாரம் மற்றும் HIV வைத்தியத் துறையின் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகள், தற்போதைய நோய்த் தாக்கங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (14) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் HIV வைத்தியக் கல்லூரியின் (SLCoSHH) தலைவர், பாலியல் தொற்றுநோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் டொக்டர் நிமாலி ஜயசூரிய உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த டொக்டர் நிமாலி ஜயசூரிய, 2021 ஆம் ஆண்டு வரை பாலியல் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதாகவும், கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் அந்த நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு முதல் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டிலும் அந்த அதிகரிப்பு தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இணையப் பயன்பாடு அதிகரித்தமை, பொருளாதார நெருக்கடி, போதைப்பொருள் பாவனை மற்றும் ஊசி மூலம் போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்தமை உள்ளிட்ட காரணிகள் இந்த நிலைமைக்குப் பங்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் HIV உள்ளிட்ட பாலியல் தொற்றுநோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது ஆண்டுதோறும் சுமார் 1,500 சிபிலிஸ் நோயாளர்கள் பதிவாகுவதாகவும், 2021 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 80 முதல் 100 வரை காணப்பட்டதாகவும் டொக்டர் நிமாலி ஜயசூரிய குறிப்பிட்டார்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் ஹெபடைட்டிஸ் சி நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு ஹெபடைட்டிஸ் பி நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
HIV தொற்றைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சைகளை வழங்குவதற்கும் இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்திய நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும், இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் HIV வைத்தியக் கல்லூரியின் வருடாந்த கல்வி அமர்வும் மாநாடும் எதிர்வரும் ஒக்டோபர் 29 முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
“எதிர்காலத்திற்கான பாலம் – ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத்தின் மூலம் பாலியல் சுகாதாரம் மற்றும் HIV மருத்துவத் துறையை மேம்படுத்துதல்” என்ற தொனிப்பொருளில், பிரித்தானிய HIV சங்கத்துடன் இணைந்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
