ஒக்டோபர் 2023-இல் காசா முனையில் இஸ்ரேல் தனது போரைத் தொடங்கியதில் இருந்து, 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 5 உலக ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் கல்வி உரிமையைப் பாதுகாக்க “வாழ்க்கைக்கான உண்மையான போராட்டத்தை” நடத்தி வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
இஸ்ரேலின் போரினால் காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள கல்வித் துறை “முழுமையான இனப்படுகொலைக்கு” உள்ளாகியுள்ளதாக அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொடூரமான சூழ்நிலையில் இஸ்ரேலிய காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்குக் கரையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய சோதனைச் சாவடிகள், இயக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் கல்வியாளர்களின் அன்றாட துயரங்களை அதிகரித்துள்ளன.
இத்துடன், பாலஸ்தீன வரிப் பணத்தை (Clearance revenues) இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதால், ஆசிரியர்கள் கடுமையான நிதி நெருக்கடியையும் சந்தித்து வருகின்றனர். இதனால் அரச ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்க முடியாமல் பாலஸ்தீன நிர்வாகம் திணறி வருகிறது.
எனவே, பாலஸ்தீன மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களுக்கு சர்வதேசப் பாதுகாப்பு வழங்கவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச சமூகம், ஐ.நா மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலஸ்தீன கல்வி அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
