சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு எதிரான மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெரிதும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் அனோஜன் சிவராசாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி, இந்த விவகாரம் தொடர்பில் அவதானத்துடன் இருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் பெரும் ஆறுதலையும் நிம்மதியையும் அளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நட்பு நாடான சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் அனோஜனுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்த தரப்பினரின் விடாமுயற்சியினால் இந்தச் சாதகமான முடிவைப் பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு விசேட நன்றியைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு நாடுகளின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அனோஜனுக்கு எதிரான ஏனைய சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
வாழ்வாதாரத்தைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக உணரக்கூடாது என்றும் ஜனாதிபதி தனது பதிவில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
