பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் செயற்பாட்டின் போது, ஜனாதிபதிச் செயலக அதிகாரிகள் தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்படக் காரணமாக அமைந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் பிரதியை தான் முழுமையாகப் பரிசீலித்ததாகவும், ஜனாதிபதி செயலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த தொழில்நுட்பக் குறைபாடே நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டதாகவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஞானசார தேரருக்கு எதிராக B 7417/10 மற்றும் 40042 ஆகிய இரண்டு வழக்குகள் விசாரணையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிச் செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளர், இப்பொதுமன்னிப்பு வழங்குவதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் ஒப்புதல் அவசியமென தன்னிடம் தெரிவித்ததாக சிறிசேன தெரிவித்தார்.
எனினும், அவசியமான ஆவணங்கள் எவையும் அமைச்சுக்கு அனுப்பப்படாமலேயே, உரிய அனுமதியைப் பெறாமல் தனது கையெழுத்து பெறப்பட்டுள்ளது.”இது என்னை ஏமாற்றும் செயலாகும்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தன் ஆட்சிக் காலத்தில் அதிகாரிகளால் இழைக்கப்பட்ட இந்தத் தவறு காரணமாகவே ஞானசார தேரர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிட்டதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி , நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் மதிப்பதாகவும் அது சரியானதுதான் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், தன் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்ட அதிகாரிகளால் இழைக்கப்பட்ட இத்தவறுக்காக பௌத்த மதகுருமார்களிடம் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இச்சம்பவம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கமளிக்கும் நோக்கில் தான் இந்த அறிக்கையை வெளியிட்டதாக மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
