முஸ்லிம் வாலிபர்களை போதையிலிருந்து மீட்டெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தை நோக்கிய PHF இன் பணிகள் ஆரம்பம்; துறைசார் நிபுணர்களும் பங்கேற்பு.
எமது தாய் திருநாட்டின் புரையோடிப் போயுள்ள பாரிய பிரச்சினையான போதைப் பொருளானது இளைஞர்களையும் மாணவர்களையும் மிக கடுமையாக பாதித்துள்ளது.
இதன் பயங்கரத்திலிருந்து தமது பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் பெற்றோரின் அவசியமும், சவாலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவையாக உள்ளன.
முன் எப்போதும் இல்லாத அளவு தற்போதைய அரசாங்கம் போதைப்பொருள் இல்லாத ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ள வேளையில், சிவில் சமூகம் என்ற வகையில் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற போதைப்பொருள் பாவனையாளர்களை மீட்டெடுக்கின்ற ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் தேவையை உணர்ந்த ஒரு குழுவினர் நோயாளர் பராமரிப்பு நிதியம் (PHF) என்ற பெயரில் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தை துறைசார் நிபுணர்களால் நிபுணர்களின் பங்களிப்புடன் உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வாக துறைசார் நிபுணர்களுடனான ஒரு நாள் செயலமர்வு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள AMYS மண்டபத்தில் நடைபெற்றது.
PHFஇன் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷெக் எம்.எஸ்.எம். நூருல்லாஹ் [நளீமி] தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பணிப்பாளர் சபை உறுப்பினராக அஷெக் எம்.எஸ்.எம். அப்துல் முஜீப், விங் கமாண்டர் [ஓய்வு பெற்ற] ஷிபா, AMYSஇன் பணிப்பாளர் அஷ்ஷெக் எம்.எஸ்.எம் தாஸிம் ஆகியோருடன் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்களிலிருந்து இணைந்து பணியாற்றுகின்ற அரச நிறுவனங்களைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களும் இதில் கலந்து கொண்டனர்.
முழு நாள் நிகழ்வாக மிக ஆர்வத்துடன் நிகழ்ந்த இந்த அமர்வில் அரசின் வழிகாட்டலுக்கு ஏற்ப எவ்வாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு ஒரு குறுகிய காலத்துக்குள் இதன் அடுத்தக்கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் இதற்கான செயலணியின் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
