வருமானம் உயர்ந்தாலும், இலங்கை குடும்பங்களின் கொள்வனவு சக்தி சுமார் 40% சரிவு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
2019 ஆம் ஆண்டிற்கும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இலங்கையின் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் தமது கொள்வனவு சக்தியில் (Purchasing Power) சுமார் 40 சதவீதத்தை இழந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆரம்பகட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
குடும்பங்களின் வருமானம் ரூபாய் அடிப்படையில் அதிகரித்திருந்தாலும், வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதைத் திணைக்களத்தின் திருத்தப்பட்ட ‘குடும்ப வருமானம் மற்றும் செலவின மதிப்பீட்டு’ (Household Income and Expenditure Survey) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2019 ஆம் ஆண்டில் 53,333 ரூபாயாக இருந்த மாதாந்த இடைநிலை குடும்ப வருமானம் (Median income), 2025 முதல் காலாண்டில் 75,882 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும், பணவீக்கத்தைக் கணக்கிடும்போது அதன் உண்மையான மதிப்பு 39.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோல், மாதாந்த சராசரி குடும்ப வருமானம் 76,414 ரூபாயிலிருந்து 120,266 ரூபாயாக உயர்ந்திருந்தாலும், அதன் உண்மையான கொள்வனவு மதிப்பு 32.8 சதவீதத்தால் குறைந்துள்ளது.
மாதாந்த சராசரி குடும்பச் செலவினம் 63,130 ரூபாயிலிருந்து 116,191 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் நிலையான விலைகளின் அடிப்படையில் இது 21.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, மக்கள் அதிக பணத்தைச் செலவிட்டாலும் அவர்களால் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் 34.2 இலட்சம் பேர்: 2019 இல் 14.3 சதவீதமாக இருந்த தேசிய வறுமை விகிதம், 2025 முதல் காலாண்டில் 16 சதவீதமாக அதிகரித்து 2016 ஆம் ஆண்டின் நிலைக்குத் திரும்பியுள்ளது. இதன்படி சுமார் 3.42 மில்லியன் (34.2 இலட்சம்) மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.
ஒரு நபருக்கான மாதாந்த வறுமை எல்லை (Poverty threshold) 2019 இல் 6,966 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 16,417 ரூபாயாக உயர்ந்துள்ளது. அடிப்படை உணவு (நாளொன்றுக்கு 2,030 கிலோகலோரி) மற்றும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செலவுப் பெருக்கத்தையே இது காட்டுகிறது.
நாட்டின் மிகப் பணக்கார 20 சதவீத குடும்பங்களின் சராசரி மாதாந்த வருமானம் 335,679 ரூபாயாக உள்ள நிலையில், மிக ஏழ்மையான 20 சதவீத குடும்பங்களின் வருமானம் 22,612 ரூபாயாக மட்டுமே உள்ளது (சுமார் 15 மடங்கு வித்தியாசம்).
பெருந்தோட்டத் துறையிலேயே அதிகபட்ச வறுமை விகிதம் (23%) பதிவாகியுள்ளது. கிராமப்புறங்களில் 17.3% ஆகவும், நகர்ப்புறங்களில் 7.8% ஆகவும் வறுமை விகிதம் காணப்படுகிறது. எனினும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மொத்த மக்களில் 86 சதவீதமானோர் (சுமார் 2.93 மில்லியன்) கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2022 இல் நடத்தப்படவிருந்த இந்த மதிப்பீடு, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் 2024 சனத்தொகை கணக்கெடுப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் சுமார் 25,000 குடும்பங்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டுத் தரவுகளே தற்போது தற்காலிக அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.