Friday, November 6, 2026

KFC, McDonald போன்ற நிறுவனங்கள் ஹலால் கவுன்சிலின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாலேயே சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன: ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ஹலால் கவுன்சில் பிரமுகர் தெரிவிப்பு!

2 min read

வெள்ளவத்தையில் அமைந்துள்ள மெரைன் கிராண்ட் மண்டபத்தில், இலங்கை ஹலால் கவுன்சில் (HAC) சார்பில் ஹலால் விழிப்புணர்வு மற்றும் மக்கள் தொடர்பு தலைவர் அஷ் ஷைக் எம்.எம். இர்பான் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நவம்பர் 03ஆம் திகதி 2026 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2013-ஆம் ஆண்டில் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் காரணமாக, ஹலால் உற்பத்திகளை கண்காணிக்கின்ற அல்லது அதற்கான சான்றிதழ்களை வழங்குகின்ற இந்தத் துறையினர் மிகக் கடுமையான சவால்களுக்கு முகம் கொடுத்து, அவர்களுடைய நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்ட சூழலில், இந்த ஹலால் நிறுவனம் எப்படி இந்த நாட்டில் இயங்குகிறது? உணவு உற்பத்தித் துறை உட்பட இன்னும் பல துறைகளில் எவ்வாறு இந்த ஹலால் நிறுவனம் இந்த நாட்டில் செயல்படுகிறது? ஹலாலான உற்பத்திகளைத் தரப்படுத்துவதற்காகவும் உறுதிப்படுத்துவதற்காகவும் எத்தகைய விஞ்ஞானபூர்வமான முறைகளைக் கையாளுகிறது? என்பதைப்பற்றியெல்லாம் இந்த சந்திப்பில் அஷ்ஷைக் எம்.எம். இர்பான் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கினார்.

ஏராளமான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த விசேட சந்திப்பில்,

H.A.C. என்று அழைக்கப்படுகின்ற ஹலால் கவுன்சில் சர்வதேச மட்டத்தில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது, அதனுடைய தரச்சான்றிதழ் எந்தளவு தூரம் இலங்கையுடைய உற்பத்தித் துறையிலும் ஏற்றுமதித் துறையிலும் முக்கியமான தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது, அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு இந்த ஹலால் உற்பத்தித் துறை எவ்வளவு பெரிய பங்களிப்பை செய்கிறது என்பதனைப்பற்றியெல்லாம் இந்தப் சந்திப்பின்போது விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களில் ஒருவர்,

மெக்டொனால்ட் (McDonald), கே.எப்சி (KFC) போன்ற நிறுவனங்கள் இலங்கையிலே செயல்படுகின்ற பொழுது, அவற்றுக்கான தரச்சான்றிதழை எவ்வாறு நீங்கள் வழங்கலாம்? என்று கேள்வி எழுப்பினார்.

அந்நிறுவனங்கள் எத்தகைய பின்னணிகளைக் கொண்டவை என்பதை ஹலால் கவுன்சில் பார்ப்பதை விட்டு, ஹலால் கவுன்சிலுடைய நிபந்தனைகளுக்குட்பட்ட வகையிலே அந்நிறுவனங்கள் தங்களுக்கான தரச்சான்றிதழை வழங்குமாறு கேட்கப்படுகின்ற பொழுது, அதற்கான தரச்சான்றிதழை ஹலால் கவுன்சில் வழங்குவதேயொழிய, அந்த நிறுவனங்களின் பின்னணியை அடிப்படையாக வைத்து இச்சான்றிதழ்கள் ஒருபோதும் வழங்குவதும் இல்லை, அந்நிறுவனங்கள் காசா, பலஸ்தீன் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்பதை ஊக்குவிக்கும் வகையில் இவைகள் வழங்குவதில்லை என்றும் அந்த கேள்விக்கான பதிலை அப்போது விரிவுரை வழங்கிய அஷ்ஷைக் எம்.எம். இர்பான் மேலும் தெரிவித்தார்.

இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில், இந்த ஹலால் கவுன்சில் செய்கின்ற பணிகளை ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாலைப் பொழுதிலே ஊடகவியலாளர்கள் பலரும் எழுப்பிய பயனுள்ள கேள்விகளுக்கான பதில்களும் விளக்கங்களும் ஹலால் நிறுவனத் கவுன்சிலுடைய பொறுப்பாளர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நாட்டுடைய பொருளாதாரத்திற்கும், அதேபோன்று தூய்மையான உணவு பரிமாறலுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்ற ஹலால் கவுன்சிலுடைய பணிகளை இங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் பாராட்டியதோடு, இந்த நிறுவனத்தின் பணிகளை ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்தும் இந்த நாட்டு மக்களுக்கு எல்லா மொழிகளிலும் சொல்ல வேண்டும், கருத்துக்களைப் பரிமாற வேண்டும், பரப்ப வேண்டும் என்ற வேண்டுகோள்களும் ஹலால் கவுன்சில் மூலமாக ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பான இராப்போசணமும் வழங்கப்பட்டது.