Tuesday, November 24, 2026

முகப்பொலிவு க்ரீமால் 17 வயதுச் சிறுமிக்குத் தீவிர சிறுநீரகப் பாதிப்பு: அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு அதிக இரசாயனம்!

1 min read
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவர், ஆன்லைன் மூலம் வாங்கிய சருமத்தை வெண்மையாக்கும் (Skin-lightening) க்ரீமைப் பயன்படுத்தியதால் தீவிர சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த க்ரீமைக் கடந்த சுமார் ஒரு வருட காலமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கடுமையான உடல்நலக் குறைபாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அவருக்குத் தீவிர சிறுநீரகப் பாதிப்பு (Membranous nephropathy) ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் பயன்படுத்திய குறித்த க்ரீம் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில், அழகுசாதனப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவான 1 ppm என்பதை விட 12,500 மடங்கு அதிகமாக (12,500 ppm) நச்சுத்தன்மை வாய்ந்த பாதரசம் (Mercury) அடங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
⚠️ சுகாதார எச்சரிக்கை:பாதரசம் கலந்த சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களைப் பயன்படுத்துவது சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பாரதூரமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, முறையான மூலப்பொருட்கள் பற்றிய விபரங்களோ அல்லது பாதுகாப்புச் சான்றிதழ்களோ இன்றி ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.