வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த மீள்குடியேற்றங்கள் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மீதான நடவடிக்கைகளிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இன்று (27) விலகிக்கொண்டார்.
நீதிபதிகள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேய்கூன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, நீதிபதி நவாஸ் தனிப்பட்ட காரணங்களால் மனுவை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
செப்டம்பர் 9 ஆம் திகதியன்று மற்றொரு அமர்வின் முன் மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது என வாதிட்டும், அதனை இரத்து செய்யக் கோரியும் ரிஷாத் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மஹிந்த சமயவர்தன, யசந்த கொடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர உள்ளிட்ட பல உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னதாக இந்த மனுவை விசாரிப்பதிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
