தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவின் உத்தரவின் பேரில் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய இரு தினங்கள் 4 பாடசாலைகள் மூடப்பட்டன.
தெனியாய மத்திய மகா வித்தியாலயம், தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம், பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம், குறித்த பாடசாலைகளில் மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தற்போது பரவி வரும் காய்ச்சலின் தன்மை மற்றும் அதன் பின்னணி குறித்துக் கண்டறியவே கொழும்பிலிருந்து விசேட தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு தெனியாயவிற்கு வருகை தரவுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க, “தற்போது நிலவும் காய்ச்சல் நிலைமை குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளனவே தவிர, நிலைமை இன்னும் தீவிரமடையவில்லை” எனத் தெரிவித்தார்.
