ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

Date:

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) – (fb)

காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி புத்தாண்டு நம்மை வந்தடைந்துள்ளது. ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டு நிறைவுபெற்று, நாம் 1448 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கின்றோம்.

இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்த ‘ஹிஜ்ரத்’ (இடப்பெயர்வு) நிகழ்வை மையப்படுத்தியே இந்த நாட்காட்டி உருவாக்கப்பட்டது.

எனவே, முஸ்லிம்களாகிய நாம் ஹிஜ்ரி நாட்காட்டியின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் ஆழமாக அறிந்திருப்பது இன்றியமையாததாகும்.

இன்று மனித நாகரிகத்தில் பல்வேறு சமூகங்களாலும் மதங்களாலும் உலகெங்கிலும் 40-க்கும் மேற்பட்ட நாட்காட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, யூதர்களின் ஹீப்ரு நாட்காட்டி, சீன நாட்காட்டி, இந்து நாட்காட்டி மற்றும் ஜப்பானிய நாட்காட்டி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பொதுவாக நாட்காட்டிகள் மூன்று அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன:
1. சூரிய நாட்காட்டி (Solar Calendar): சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

2. சந்திர நாட்காட்டி (Lunar Calendar): சந்திரனின் தேய்வு மற்றும் வளர்ச்சியை (பிறை நிலைகளை) அடிப்படையாகக் கொண்டது.

3. சூரிய-சந்திர நாட்காட்டி (Luni-solar Calendar): இவ்விரண்டின் சேர்க்கையையும் சமநிலையையும் கொண்டது.

இவற்றில் இஸ்லாமிய ‘ஹிஜ்ரி நாட்காட்டி’ என்பது முற்றிலும் சந்திர ஓட்டத்தை (Lunar Cycle) மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட சந்திர நாட்காட்டியாகும்.

சந்திர நாட்காட்டியின் படி, ஓர் ஆண்டு என்பது 354 அல்லது 355 நாட்களைக் கொண்டதாகும். இது சூரிய நாட்காட்டியின் ஓர் ஆண்டை விட சுமார் 11 நாட்கள் குறைவாக இருக்கும்.

எமது மார்க்க வழிபாடுகளும் சட்ட விதிகளும் இந்த ஹிஜ்ரி நாட்காட்டியுடனேயே நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன.

உதாரணமாக, ரமழான் மாத நோன்பு, ஹஜ் பெருநாள், ஸகாத் கணக்கீடு மற்றும் பெண்களுக்கான இத்தா காலம் போன்ற அனைத்தும் சந்திர ஓட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

இன்று உலக அளவில் நிர்வாக மற்றும் வணிக ரீதியாகப் பெரும் செல்வாக்குச் செலுத்தும் நாட்காட்டியாக விளங்குவது எமது அன்றாட வழக்கிலுள்ள ‘கிரிகோரியன் நாட்காட்டி’ (Gregorian Calendar) ஆகும்.

இது 1582 ஆம் ஆண்டு போப் 13 ஆம் கிரிகோரியால் (Pope Gregory XIII) அறிமுகப்படுத்தப்பட்டது. இது உரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமாகும்.

இது வருடத்திற்கு 365 அல்லது 366 நாட்களைக் கொண்டதுடன், கிறிஸ்தவப் பார்வையில் இயேசுநாதர் (ஈஸா அலை) அவர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

மிக முக்கியமாக, இந்த கிரிகோரியன் நாட்காட்டியின் மாதப் பெயர்கள் பலவும் பண்டைய ரோமப் புராணக் கடவுள்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை:

○ ஏப்ரல் (April): ரோமானியப் பெண் கடவுள் அல்லது வசந்த காலத் திறப்பைக் குறிக்கும் சொல்.

○ மே (May):விவசாயத்திற்கும் பூமி வளர்ச்சிக்கும் உரிய ரோமானியப் பெண் கடவுளான ‘மயா’ (Maya) என்பவரின் மாதம்.

○ ஜூன் (June): திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் குடும்ப ஆட்சிக்குரிய ரோமானியப் பெண் கடவுளான ‘ஜுனோ’ (Juno) என்பவரின் பெயரால் அமைந்தது.
இத்தகைய பின்னணியைக் கொண்ட கிரிகோரியன் நாட்காட்டியே இன்று உலகெங்கும், ஏன் தற்கால அரபு நாடுகளின் அன்றாட நிர்வாக நடைமுறைகளிலும் கூட பரவலாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாட்காட்டி முறைமை நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலத்திலேயே முழுமையாக நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், ஹிஜ்ரி 17 ஆம் ஆண்டில்தான் இஸ்லாமிய அரசுக்கென ஒரு தனித்துவமான நாட்காட்டியின் தேவை உருவானது.

தூர தேசத்து ஆளுநர்களிடமிருந்து வரும் கடிதங்களிலும் அரசாங்க ஆவணங்களிலும் ஆண்டுகள் தெளிவாகக் குறிப்பிடப்படாததால் திகதிக் குழப்பங்கள் ஏற்பட்டன.

இதனால், ஒரு நிலையான நாட்காட்டியை உருவாக்க உமர் (ரழி) அவர்கள் சஹாபாக்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.

அக்கூட்டத்தில் புதிய நாட்காட்டியை எதிலிருந்து தொடங்குவது என்பது பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன:

* நபியவர்கள் பிறந்த ஆண்டிலிருந்து தொடங்கலாமா?
* நபியவர்களுக்கு நுபுவ்வத் (நபித்துவம்) கிடைத்த ஆண்டிலிருந்து தொடங்கலாமா?
* நபியவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட ‘இஸ்ரா மிஃராஜ்’ நிகழ்ந்த ஆண்டிலிருந்து தொடங்கலாமா?

* அல்லது நபியவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் சென்ற ஆண்டிலிருந்து தொடங்கலாமா?

இறுதியாக, அலி (ரழி) மற்றும் உதுமான் (ரழி) உள்ளிட்ட ஸஹாபாக்களின் ஆலோசனையின் படி, ‘ஹிஜ்ரத்’ நிகழ்ந்த ஆண்டே இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் திருப்புமுனையாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய நிகழ்வாகவும் இருந்ததால், அதையே புதிய நாட்காட்டியின் தொடக்கப் புள்ளியாக உமர் (ரழி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

எனவே, ஹிஜ்ரத் என்பது நபியவர்களின் ஸீராவில் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சியைக் குறித்த மாபெரும் திருப்புமுனையாகும்.

மேலதிக தகவல்:
சூரிய நாட்காட்டிக்கும் சந்திர நாட்காட்டிக்கும் இடையிலான 11 நாட்கள் வித்தியாசம் காரணமாக, ஒரு மனிதனின் வயது இரு நாட்காட்டிகளின் படியும் கணக்கிடப்படும் போது மாறுபடுகிறது.

இதனைப் புரிந்துகொள்ள ஒரு பொதுவான கணக்கீடு உண்டு:
– 16 வயது வரை: இரு நாட்காட்டிகளுக்கும் இடையே வயது வித்தியாசம் தெரிவதில்லை (16 = 16).

– 16 முதல் 48 வயது வரை: சூரிய நாட்காட்டி வயதை விட சந்திர நாட்காட்டியில் 1 ஆண்டு அதிகமாகும் (+1 ஆண்டு).

– 49 முதல் 81 வயது வரை: சூரிய நாட்காட்டி வயதை விட சந்திர நாட்காட்டியில் 2 ஆண்டுகள் அதிகமாகும் (+2 ஆண்டுகள்).

– 81 வயதிற்கு மேல்: சூரிய நாட்காட்டி வயதை விட சந்திர நாட்காட்டியில் வித்தியாசம் 3 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் (+3 ஆண்டுகள்).

 

Popular

More like this
Related

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...